அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரியுடன் வடகொரியா மூத்த அதிகாரி சந்திப்பு

4765 0

நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.
இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளை பியாங்யாங் நகருக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியும், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மிகவும் நெருக்கமானவருமான கிம் யோங்-சோல் நேற்று அமெரிக்காவுக்கு வந்தார். கடந்த 20 ஆண்டுகளில் முக்கிய வடகொரிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். நியூயார்க் நகருக்கு வருகை தந்துள்ள அவர் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a comment