வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

368 0

201609131034080210_perarivalan-attack-in-vellore-jail_secvpfவேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது கொலை வழக்கில் தண்டனை பெற்ற ராஜேஷ்கண்ணா இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பேரறிவாளனுக்கு தலை மற்றும் கைகளில் 6 தையல் போடப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறுநீரக தொற்று, மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் அவருக்கு மாதந்தோறும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மாத்திரை மருந்து சாப்பிட்டு வருகிறார்.

ஜெயிலில் உயர் பாதுகாப்பு கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். இதே பிரிவில் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ராஜேஷ் கண்ணா என்பவரும் உள்ளார்.இவருக்கும் அங்குள்ள கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜேஷ் கண்ணாவை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டுமென சிறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். கைதிகள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க ராஜேஷ்கண்ணா வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனால் ராஜேஷ்கண்ணா ஆத்திரமடைந்தார். தான் மாற்றப்பட்டதற்கு பேரறிவாளன் தூண்டுதலே காரணம் என அவர் நினைத்து கோபமடைந்தார். அவரை தாக்கவும் திட்டமிட்டார். இதற்காக ஜெயிலில் இருந்து இரும்பு கம்பி ஒன்றை எடுத்து வைத்திருந்தார். இன்று காலை ஜெயில் வளாகத்தில் பேரறிவாளன் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது ராஜேஷ்கண்ணா ஓடிச் சென்று இரும்பு கம்பியால் பேரறிவாளனை சரமாரியாக தாக்கினார். இதில் பேரறிவாளனின் தலை மற்றும் கைகளில் அடி விழுந்து ரத்தம் வெளியேறியது. இதனைக் கண்டு திடுக்கிட்டு சிறை காவலர்கள் ராஜேஷ்கண்ணாவை தடுத்து நிறுத்தி இழுத்து சென்றனர்.

பலத்த காயமடைந்த பேரறிவாளன் தரையில் சுருண்டு விழுந்தார். உடனே அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.தலை மற்றும் கைகளில் 6 தையல் போடப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் பேரறிவாளன் உள்ளார். இந்த சம்பவத்தால் ஜெயிலில் பதட்டம் ஏற்பட்டது.

இதுகுறித்து பேரறிவாளனின் வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-பேரறிவாளன் இன்று காலை நடைபயிற்சி சென்ற போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்ற கைதி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். ராஜேஷ்கண்ணா வேறு அறைக்கு மாற்றப்பட்டதற்கு பேரறிவாளன் தூண்டுதலே காரணம் என நினைத்து தாக்குதல் நடத்தியுள்ளார் என்றார்.

உயர் பாதுகாப்பு கைதிகள் பிரிவில் உள்ள பேரறிவாளன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக தமிழ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஜெயில் வளாகத்தில் கைதிக்கு இரும்பு கம்பி எப்படி கிடைத்தது? இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.