பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்கள் கொள்ளை -விக்னேஸ்வரன்

496 0

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புக்களை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு என்ற போர்வையில் இரகசியமாகவும் தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

வன்னியிலுள்ள வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே வட மாகாண முதலமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்..

இந்த நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற கடுமையான யுத்தத்தின் விளைவாக இப் பகுதிகளில் வாழ்ந்துவந்த பூர்வீகக் குடிகளின் அமைதியான வாழ்க்கை முறைகள் முழுமையாக சீர்குலைக்கப்பட்டு தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

அவர்களின் ஜீவனோபாய வழிமுறைகள் அத்தனையும் அழிக்கப்பட்டு வீடு வாசல்கள் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் குடிசை வீடுகளில் தொழில் முயற்சிகள் இன்றி, உறவுகளை இழந்து அல்லலுற்றுக் கொண்டிருக்கின்ற இம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவிற்காவது உயர்த்துவதற்காக நாம் அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும் வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புக்களையும் கபளீகரம் செய்வதற்கு கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

நாமோ எதையும் உணராதவர்களாக வாளா மடந்தைகளாக சிறு சிறு மகிழ்ச்சிக் கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோம்.

மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புக்கள் கேள்விக் குறியாக்கப்படுவதற்கான முத்தாய்ப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ் இரகசியமாகவும், தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டுவருவது எம்மால் உணரக்கூடியதாக உள்ளது.

ஆனால் அதனை எந்த அளவுக்கு எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது கேள்விக் குறியாக உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment