சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அதிக இனிப்பு உணவுகளை வழங்கியது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சர்க்கரை நோய் நிபுணர்கள் பலர் அவருக்கு போயஸ் கார்டனில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இருந்தபோதிலும், ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிக அளவில் இருந்துள்ளது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்த சர்க்கரை நோய் நிபுணர்கள் ஜெயஸ்ரீகோபால், ராமச்சந்திரன், சாந்தாராம் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததை உறுதி செய்துள்ளனர். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் சர்க்கரை நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் பெரும்பாலான நாட்கள் அவர் இனிப்பு வகை உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டதாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி லட்டு, ரசகுல்லா, குலோப்ஜாமூன் போன்ற இனிப்பு வகைகளையும், டிசம்பர் மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் மற்றும் மில்க் ஷேக் வகைகளையும் ஜெயலலிதா உட்கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்க்கரை நோயால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருந்த ஜெயலலிதாவுக்கு கட்டுப்பாடின்றி அதிக இனிப்பு உணவு வகைகளை வழங்கியது ஏன்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுபோன்று இனிப்பு வகைகள் ஜெயலலிதாவுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி தான் கொடுக்கப்பட்டதா? அல்லது மருத்துவர்களின் கட்டுப்பாடுகளை மீறி ஜெயலலிதாவிற்கு இனிப்பு வகைகள் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்தும், உணவு கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் தான் ஜெயலலிதாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதா? என்பது குறித்தும் அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.