அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடாத்திய ஓரிரு நாட்களில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்க முனைவது பிரச்சினைக்குரிய ஒன்றாகும் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.
16 பேருடன் இணைந்து அரசியல் நடாத்துவதாக இருந்தால் அவர்களது அரசியல் போக்கு என்னவென்பதை தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாருடனாவது இணைந்து அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற பொதுவான கொள்கையில் நாம் செயற்படுகின்றோம் என்பது உண்மை. அதற்கு அப்பால் சென்று எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, எம்மிடையே பிரிவினையை உருவாக்க யாருக்கும் இடமளிக்க முடியாது.
இவ்வாறான ஒரு செயற்பாட்டில் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் செயற்படுகின்றார்களா? என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் என்கிறார். மற்றொருவர் கோட்டாபய ராஜபக்ஷ என்கிறார். இன்னுமொருவர் ஷமல் ராஜபக்ஷதான் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறுகின்றார். இந்த அறிவிப்புக்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.