தூத்துக்குடியில் காவல் துறையினரால் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழகமே கொதி நிலையில் இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்துக்கு வெளியிலும் இதன் அதிர்வுகள் உணரப்படுகின்றன. பக்கத்திலிருக்கும் பெங்களூருவிலிருந்து லண்டன்வரை இந்தப் படுகொலைகளுக்கான எதிர்ப்புக் குரல்கள் கேட்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமத்தின் பங்குகள் சரிந்திருக்கின்றன.
இந்தப் போராட்டம், காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு, மரணங்கள், இவற்றின் எதிரொலியாக எழும் போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. துப்பாக்கிச் சூட்டுக்கும் உயிரிழப்புக்கும் பதில் சொல்ல வேண்டியது மாநில அரசின் கடமை. முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்துச் சில பதில்களைச் சொல்லிவருகிறார். முதல்வரைக் கேட்காமலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்ற செய்திகள் வருகின்றன. போராட்டம், போராட்டக்காரர்களின் செயல்பாடுகள், காவல் துறையினரின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பழனிசாமி தன்னால் முடிந்தவரை பேசிப்பார்க்கிறார். ஆனால், சிறு குழந்தைகள்கூட அவர் பேச்சைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள். தங்களை நியாயப்படுத்திக்கொள்வதற்கான வாதங்களை முன்வைப்பார்கள். ஆனால், இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. முதல்வரையும் ஒரு சில அமைச்சர்களையும் தவிரக் கட்சியோ, கட்சியின் ஆதரவாளர்களோ பொது வெளியில் இது குறித்துப் பேசுவதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுகவினரைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.
ஆனால், தமிழக ஆளுங்கட்சிக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு வருகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளும் காவல் துறையின் நடவடிக்கைகளை ஆவேசமாக ஆதரித்துப் பேசுகிறார்கள். முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையின் செயல்பாடுகளை அவரே வெட்கப்படக்கூடிய அளவுக்கு இவர்கள் ஆதரிக்கிறார்கள்.
தமிழக ஆளுங்கட்சிக்குப் பின்னால் இருந்து இயக்கும் சக்தி எது என்பதற்கான இன்னுமொரு சான்று என்று இதைக் கடந்துவிட முடியாது. தமிழக அரசோடு நேரடியாகச் சம்பந்தப்படாத ஆளுநர் விவகாரத்தின்போதும் இவர்கள் இப்படித்தான் களமிறங்கினார்கள். ஆளுநரே மன்னிப்புக் கேட்டுவிட்ட ஒரு விவகாரத்திலும் இவர்கள் ஆளுநருக்கு ஆதரவாகப் பேசியதுடன், ஆளுநரைக் கேள்வி எழுப்பியவர்களைத் தரங்கெட்ட முறையில் விமர்சித்தார்கள்.
தமிழகத்திலிருந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிமாநிலங்களில் நீட் தேர்வை எழுத வேண்டிய நிலை வந்தபோதும் இவர்கள் சிபிஎஸ்இ அமைப்புக்கு வக்காலத்து வாங்கினார்கள். வைரமுத்து – ஆண்டாள் சர்ச்சையில் அறிவார்த்தமான முறையில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இவர்கள் இடையில் புகுந்து தங்கள் இழிமொழியால் குட்டையைக் குழப்பி விவாதத்தைக் கொன்று புதைத்தார்கள். மாட்டிறைச்சி உண்டதாகக் கூறிச் சிலர் கொல்லப்பட்டபோதும் இவர்கள் கொல்லப்பட்ட உயிர்களுக்காக அனுதாபம் தெரிவிக்கவில்லை. பசுப் பாதுகாப்பின் மேன்மை பற்றி மட்டுமே பேசினார்கள்.
இவர்களுக்கு ஏன் இந்த வேலை?
இந்துத்துவ ஆதரவாளர்களும் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளும் ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் அழைக்காமலேயே வந்து நிற்கிறார்கள்? பத்மாவதி பட சர்ச்சை, உத்தரப் பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் பலர் இறந்தது, கத்துவா பாலியல் வன்முறை, உனா பாலியல் வன்முறை ஆகிய விவகாரங்களில் அவர்கள் ஆஜரானதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அனைத்திலுமே இந்துத்துவ அமைப்புகள் அல்லது ஆட்சிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழக ஆளுநரையும் தமிழகக் காவல் துறையையும் வலிந்து வந்து நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இவர்களுக்கு என்ன வந்தது?
அரசு அதிகாரம், காவல் துறை, ராணுவம், இந்து மதம் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக இவர்கள் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அரசு, காவல் துறை முதலானவை மக்களுக்காகவே இருக்கின்றன என்னும் அடிப்படையான அம்சத்தை இவர்கள் தலைகீழாக மாற்றுகிறார்கள். இந்த அமைப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கோ, அவர்களுடைய பிரச்சினைகள், உணர்வுகள் ஆகியவற்றுக்கோ இவர்கள் கொடுப்பதில்லை. மையம், மைய நீரோட்டம், அரசு, அதிகாரம், அந்த அதிகாரத்தைச் செலுத்தும் அமைப்புகள் ஆகியவையே இவர்களுக்கு முக்கியம். இவர்களைப் பொறுத்தவரை அமைப்புகளுக்காகத்தான் மக்கள்; மக்களுக்காக அமைப்புகள் அல்ல. அமைப்புகளே, அதிலும் அதிகாரம் சார்ந்த அமைப்புகளே பாதுகாக்கப்பட வேண்டியவை. மக்கள் அந்த அமைப்புகளால் கையாளப்பட வேண்டிய இரண்டாம் நிலையிலான இருப்பு.
தூத்துக்குடியில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறார்கள். காஷ்மீரில் சுடப்பட்ட குண்டுகளால் மக்களுக்குக் கண் பார்வை பறிபோகிறது. காஷ்மீரில் ஒரு சிறுமி பலரால் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாள். மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கருதப்படும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையெல்லாம் கேட்கும்போது யாருக்கும் இயல்பாக உடனடியாகப் பதைப்பும் கவலையும் ஏற்படும். ஆனால், இந்துத்துவ இயக்க ஆதரவாளர்களும் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளும் உடனடியாக அமைப்புக்கான நியாயங்களைப் பேசத் தொடங்குவார்கள். “தூத்துக்குடியில் பல உயிர்கள் பலியானது துரதிருஷ்டவசமானதுதான், ஆனால்…” என்று நீட்டி முழக்குவார்கள். கிறிஸ்தவ அமைப்புகள் கலவரத்தைத் தூண்டிவிட்டன என்பார்கள். இடதுசாரி இயக்கங்கள், பிரிவினைவாத அமைப்புகள் கலவரத்தைத் தூண்டிவிட்டார்கள் என்பார்கள். போராட்டக் குழுவினருக்குள் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பார்கள்.
சமூக விரோதிகளாகவே இருந்தாலும் அவர்களை மார்பைப் பார்த்துக் குறிவைத்துச் சுடும் உரிமையை இவர்கள் போற்றிக் கொண்டாடும் சட்டம் கொடுக்கவில்லை என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். சீருடை அணியாத காவலர்கள் சிறிதும் பதற்றமின்றிப் பொறுமையாகக் குறிபார்த்துச் சுடுவதைப் பார்க்கும்போது காவல் துறையினரின் நோக்கமும் போக்கும் தெளிவாகப் புரிகின்றன. ஆனால், இந்தக் காட்சியைப் பார்த்த பிறகும் சமூக விரோதிகள், விஷமிகள் ஊடுருவிட்டார்கள் என்ற பல்லவியையே இவர்கள் பாடிக்கொண்டிருப்பார்கள். 17 வயதுப் பெண்ணை வாயில் சுட்டதற்கும் “கூட்டத்தில் கலந்துவிட்ட விஷமி”களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று யோசிக்க மாட்டார்கள். சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகளை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள். முழுக்க முழுக்க அரசாங்கமாகவே மாறி அரசாங்கமாகவே சிந்திக்கும் இவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களைவிடவும் அபாயகரமானவர்கள்.
நிலைப்பாடுகளும் நிஜங்களும்
இவர்கள் உண்மைகளைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. நிலைப்பாடுகள்தான் முக்கியம். நிஜங்கள் அல்ல என்பதே இவர்கள் அணுகுமுறை. வேதாந்தா நிறுவனத்திடமிருந்து அதிக நன்கொடை பெற்றது பாஜக என்னும் தகவலை ஒருவர் வெளியிட்டால் இவர்கள் உடனடியாக, “பா.சிதம்பரம்” உள்ளிட்ட பலர் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றார்கள் என்பதற்கான “தகவலை” போட்டோ ஷாப் உபயத்தில் வெளியிடுவார்கள். அற்பத்தனமான இந்த வேலைகள் இன்றைய தகவல் பெருக்க யுகத்தில் சட்டென்று பல்லிளித்துவிடுவதையும் இவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில், தகவல்களைப் பரிசோதிக்காமல் பலர் இதை நம்புவார்கள், பரப்புவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படி நம்ப விரும்புபவர்கள் அத்தகைய செய்திகளை மூன்று வேளையும் உணவுக்குப் பதிலாக விழுங்கித் திருப்தி அடைவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஜிஎஸ்டிக்கு எதிராக யாரோ எழுதிய வசனத்தை ஒரு நடிகர் பேசியதும் அவர் கிறிஸ்தவர் என்னும் தகவலைப் பேருண்மையாக முன்னிறுத்துவார்கள். வரி கட்டுபவர்கள் அனைவருக்கும் ஜிஎஸ்டிக்கு எதிராகப் பேச உரிமை உண்டு என்னும் எளிய உண்மைகூடத் தங்கள் மூளையை அண்டவிட மாட்டார்கள்.
அறநிலையத் துறை தொடர்பான தகவல்கள், அணைக்கட்டுகள் தொடர்பான தகவல்கள், தூத்துக்குடி துறைமுகம் தொடர்பான தகவல்கள் ஆகிய பல விஷயங்களிலும் ஆர்எஸ்எஸ் – பாஜகவைச் சேர்ந்த எஸ்.குருமூர்த்தி உள்ளிட்டோர் பதிவிடும் “தகவல்”களில் உள்ள பிழைகள் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்தப்பட்டன. ஆனாலும் அவர்கள் அசருவதில்லை. தொடர்ந்து பொய்ச் செய்திகளையும் பாதி உண்மைகளையும் பரப்பிவருகிறார்கள். அவர்களுடைய ஆதரவாளர்கள் அவற்றை அப்படியே பலருக்கும் அனுப்பி ஜென்ம சாபல்யம் அடைகிறார்கள்.
சுற்றுச்சூழல் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படுவதே இல்லை. வேதாந்தா போன்ற நிறுவனங்கள் உலகின் பல பகுதிகளிலும் எதிர்ப்பைச் சந்தித்துவருகின்றன என்பதும், இவற்றை எதிர்ப்பதை ஒரு குறிப்பிட்ட கட்சியை எதிர்ப்பதாகப் பொருள்கொள்ள முடியாது என்பதையும் இவர்கள் யோசிப்பதே இல்லை. நாளைக்கு அரச அமைப்பு இந்த நிறுவனத்தை மூட முடிவுசெய்தால் அப்போது இவர்கள் சூழலுக்காகப் பரிந்து பேசுவார்கள். அல்லது அந்நிய சதி வென்றுவிட்டது என்பார்கள்.
இவர்களுடைய நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பவை பிரச்சினைகளோ, அவற்றின் நிஜமாக காரணங்களோ அல்ல. அரசின், அதிகாரத்தின் குரல்தான் முக்கியம். அதிலும் அது பாஜகவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும்போது அந்த அமைப்பு கடவுளுக்கு நிகரானதாக மாறிவிடுகிறது. இதை எதிர்ப்பது தெய்வ நிந்தனையாகிவிடுகிறது.
காங்கிரஸ் அல்லது வேறு கட்சியின் ஆட்சியில் காவல் துறை வன்முறை நடந்தால் இவர்கள் இப்படியே எதிர்வினை ஆற்ற மாட்டார்கள் என்பது உண்மைதான். அதிலும் அந்த வன்முறை இந்துத்துவ இயக்கங்களுக்கு எதிராக நிகழ்ந்தால் கேட்கவே வேண்டாம். ஆனால், தேசம், அதிகாரம், சட்டத்தின் ஆட்சி, இந்துக்களின் “நலன்”, இந்துக் குறியீடுகள், “அந்நியச் சதி”க்கு எதிரான நடவடிக்கை ஆகிய விஷயங்களை இவர்கள் முழுக்க முழுக்கச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். தேசிய உணர்வையும் தேசியக் குறியீடுகளையும் ஏகபோக உரிமை கொண்டாடும் வேட்கை இதில் பிரதிபலிக்கிறது.
கரிசனம் அல்ல, பதிலடியே முக்கியம்
முஸ்லிம் சிறுமி ஒருத்தி வன்புணர்வு செய்யப்பட்டார் என்றதும், மூன்று மாதங்களுக்கு முன்பு அல்லது இரு ஆண்டுகளுக்கு முன்பு வன்புணர்வு செய்யப்பட்ட இந்துச் சிறுமியின் நினைவு இவர்களுக்கு வந்துவிடும். அந்தச் சிறுமிக்காக இவர்கள் அப்போது குரல் கொடுத்ததில்லை. இப்போது பாதிக்கப்பட்டது முஸ்லில் சிறுமி என்றதும், உடனடியாக, இந்துச் சிறுமியின் துயரத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவார்கள். ஸ்வாதி கொலையின்போது அவருடைய சாதியைக் குறிப்பிட்டு நீதி கோரிய இவர்கள், ஆணவக் கொலைகள் நடந்தபோது அதற்குப் பின்னால் இருக்கும் சாதி உணர்வைப் பற்றிப் பேசியதில்லை. காதல் விவகாரங்களால் அன்றாடம் சிதைக்கப்படும் பெண் முகங்களும் உயிர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவை என்று பார்த்ததில்லை.
எத்தகைய வன்முறையையும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நின்று பார்க்கும் பழக்கம் இவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. அரசு அதிகார அமைப்புகளின் தரப்பிலிருந்து மட்டுமே அனைத்தையும் பார்க்கும் அதிகார மனம் இப்படித்தான் செயல்படும். இந்த மனம்தான் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறது. இந்த மனம்தான் சர்வாதிகாரத்துக்கான மனநிலையை வளர்க்கிறது. இந்த மனம்தான் சர்வாதிகார அட்டூழியங்களை நியாயப்படுத்துகிறது. நேரடி சர்வாதிகாரத்தைக் காட்டிலும் அபாயகரமானது மக்களிடையே பரவிவரும் இந்த அரச மனம்தான். இத்தகைய மனம் மிகத் தெளிவான மொழியில் பேசுகிறது. நியாயத்தைப் பேசும் பாவனையில் சகல ஊடகங்களிலும் ஊடுருவி இருக்கிறது. பல பொய்த் தகவல்களை நிஜம்போன்ற ஆதாரமாக முன்வைக்கிறது.
இந்த மனம்தான் நமது காலத்தின் மிகத் தீவிரமான அபாயம். ஏனென்றால், இந்த மனம்தான் அதிகாரத்தையும் காவல் துறை முதலான அமைப்புகளையும் கேள்விக்கு அப்பாற்பட்ட சக்திகளாகக் கட்டமைத்து வருகிறது. ‘கேள்விக்கு அப்பாற்பட்ட’ என்னும் பார்வையில்தான் சர்வாதிகாரத்துக்கான சகல வித்துக்களும் சத்துக்களும் புதைந்திருக்கின்றன.