துப்பாக்கி சூடு குறித்து தமிழக அரசின் அறிக்கை மீது உள்துறை இலாகா கேள்வி எழுப்பும் – அமித்ஷா

4962 0

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு அளித்த அறிக்கையின் மீது மத்திய உள்துறை இலாகா கேள்வி எழுப்பும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.

மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சியின் 4 ஆண்டுகால செயல்பாடுகள் குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காவிரி பிரச்சினை, தூத்துக்குடி சம்பவம் குறித்து அவரிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டன.

அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து அமித்ஷா கூறியதாவது:-

காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி மத்திய அரசு ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டிய நேரத்தில் கர்நாடகத்தில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. காவிரி பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் ஒன்றாக அறிக்கை அளிக்கவில்லை. கர்நாடகத்தில் அப்போது காங்கிரஸ் ஆட்சி. இதனால் அந்த மாநிலமும் உடனடியாக அறிக்கை அளிக்கவில்லை. எனவேதான் காவிரி விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்துக்கு கர்நாடக அரசே காரணம்.
தூத்துக்குடியை பொறுத்தவரை அங்கு துப்பாக்கி சூடு நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் கண்டித்து இருந்தார். பிரதமர் மோடியும் மிகவும் வேதனைப்பட்டார். சட்டம்-ஒழுங்கு மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உள்துறை இலாகா தமிழக அரசிடம் அறிக்கை கேட்டது. அதன்படி தமிழக அரசு அறிக்கை அளித்து இருக்கிறது. அந்த அறிக்கையின் மீது உள்துறை இலாகா கேள்வி எழுப்பும்.இவ்வாறு அமித்ஷா கூறினார்.

மேலும், ‘தமிழக அரசியலில் பா.ஜனதா என்ன நிலை எடுக்கப்போகிறது?’ என்று கேட்டதற்கு, ‘அதை ஒலிப்பெருக்கியில் சொல்ல முடியாது’ என்று அமித்ஷா பதில் அளித்தார்.

Leave a comment