சிகிச்சையின்போது ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு

382 0

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது தனக்கு என்ன வகை உணவுகள் வேண்டும் என கைப்பட எழுதிய பட்டியலை விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார். 

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகினர்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகளும், அவ்வப்போது பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக்-கும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவு பட்டியல் மூலம் இது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியன்று தனக்கு என்ன வகை உணவுகள் தேவை என அவரே கைப்பட எழுதியதாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை மருத்துவர் சிவக்குமார் இன்று விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

அந்த பட்டியலில் அவருக்கு தேவையான உணவு வகைகளும், அவரது எடை உள்ளிட்ட சில குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஜெயலலிதாவே கைப்பட எழுதியதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a comment