பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு ராணுவம் சம்மன்

467 0

பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் ஆஜராகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. 

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக 1990-1992-ம் ஆண்டுகள் இடையே பணியாற்றியவர், ஆசாத் துரானி இவர், ‘உளவு வரலாற்றுக் கூறு; ரா, ஐ.எஸ்.ஐ. மற்றும் அமைதியின் மாயை’(தி ஸ்பை குரோனிக்கல்ஸ், ரா, ஐ.எஸ்.ஐ. அண்ட் தி இல்லுயூசன் ஆப் பீஸ்) என்னும் புத்தகத்தை இந்திய உளவுப் பிரிவான ‘ரா’வின் முன்னாள் தலைவரான அஸ் துலாத்துடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த புத்தகம் பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

எதிரி நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் இணைந்து உளவு பார்ப்பது குறித்த தகவல்களை எப்படி புத்தகமாக எழுதி வெளியிடலாம்? என்று இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் ஆஜராகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. அதையடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் இது ராணுவ நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை ஆசாத் துரானி மறுத்தார்.இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a comment