வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பா.ம.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான ஜெ.குரு உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி:- பா.ம.க.வின் முன்னணித் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். காடுவெட்டி குரு 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காடுவெட்டி குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பா.ம.க.வினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- பா.ம.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குருவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்கள் அனைவரின் துயரில் பங்குகொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெ.குரு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்ததை கண்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். அவரது மறைவை நேரில் கண்டும், மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது மறைவு என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
குருவின் மறைவுச் செய்தியை பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். எனது அதிர்ச்சி, வேதனை, சோகம் ஆகியவற்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.