இருமுகத்தோற்றம் ! -பி.மாணிக்கவாசகம்

508 0

யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட தின­மா­கிய மே 18 ஆம் நாள் நாட்­டை­ அ­ர­சியல் உணர்வு ரீதி­யாக இரு துரு­வங்­க­ளாக்­கி­யி­ருக்­கின்­றது. இன ஐக்­கி­யத்­திற்கும் அமைதி–சமா­தா­னத்திற்கும் வழி வகுக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட யுத்த முடிவு தின­மா­னது அந்த எதிர்­பார்ப்பை நிறை­வேற்றத் தவ­றி­விட்­டது. 

அந்த  தினம் நேர் முர­ணான இரு முகத்­தோற்­றங்களைக் கொண்­டி­ருக்­கின்­றது. நாட்டின் பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் அது யுத்த வெற்றி தின­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. ஆனால் வடக்­கிலும்–கிழக்­கிலும் நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களிலுள்ள தமிழ் மக்கள் மனங்­க­ளிலும் அந்த தினம் ஆழ்ந்த துய­ரத்தைத் தரும் ஒரு சோக தின­மாக–- துக்­க­ தி­ன­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

பயங்­க­ர­வாதம் என்று அர­சு­க­ளினால் வர்­ணிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்டத்தை நாட்டின் தென்­ப­குதி இன்னும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டா­கவே நோக்­கு­கின்­றது. அடக்­கு­மு­றை­களிலிருந்து விடு­தலை பெறு­வ­தற்கும் அர­சியல் உரி­மையை வென்­றெ­டுப்­ப­தற்­கு­மாக நடத்­தப்­பட்ட அந்த யுத்தம் முள்­ளி­வாய்க்­காலில் கோர­மான முறையில் முடி­வு­றுத்­தப்­பட்­டது.

ஆயுதம் ஏந்­தாத அப்­பாவிப் பொது­மக்கள் கொத்துக் கொத்­தாகக் கொன்­றொ­ழிக்­கப்­பட்ட பேர­னர்த்தம் அங்கு நிகழ்த்­தப்­பட்­டது. உண­வுக்கும் மருந்­துக்கும் வழி­யின்றி வாடிய மக்கள் மீது மிக மோச­மான முறையில் எறி­கணைத் தாக்­கு­தல்­களும் பீரங்கித் தாக்­கு­தல்­களும் விமா­னக்­குண்டுத் தாக்­கு­தல்­களும் நடத்­தப்­பட்­டன. இந்த மும்­முனைத் தாக்­கு­தலில் பலர் கோர­மாகக் கொல்­லப்­பட்­டார்கள். மழை­யென பொழிந்த துப்­பாக்கி வேட்­டுக்­களும் மக்­களை வேட்­டை­யா­டி­யி­ருந்­தன.

யுத்தம் முடி­வுக்கு வந்­த­து­கூட தெரி­யாத நிலையில், பாது­காப்­புக்­காக பதுங்கு குழி­களில் மறைந்­தி­ருந்­த­போது பலர் அந்தக் குழி­க­ளி­லேயே சுட்டுக் கொல்­லப்­பட்ட பேர­வ­லமும் நடை­பெற்­றுள்­ளது. இந்த மனிதப் பேர­வ­லத்­தின்­போது முள்­ளி­வாய்க்­கா­லிலும் அதனைச் சூழ்ந்த பிர­தே­சங்­க­ளிலும் மக்கள் இரத்த வெள்­ளத்தில் மிதந்­தார்கள். கட­லோரப் பிர­தே­ச­மா­கிய அப் பகுதி இரத்­தத்தில் தோய்ந்­தது. மனித அவ­ய­வங்­களும் இறந்த உடல்­களும் அங்கு சித­றிக்­கி­டந்­தன. ஆண்–பெண் என்ற பால் நிலை பாராமலும் குழந்­தைகள்–முதி­ய­வர்கள் என்ற வயது வித்­தி­யா­ச­மின்­றியும் மக்கள் கொல்­லப்­பட்­டார்கள். நேர­டி­யாகக் கண்ட பலர் இந்தத் தக­வல்­களைத் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இன­வாத அர­சியல் மனோ­பா­வத்தில் மாற்­ற­மில்லை

முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்த சம்­ப­வங்கள் மிகக் கோர­மான நிகழ்­வாக வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்றன. இந்த அவ­லத்தில் படு­கா­ய­ம­டைந்த பலர் உட­ன­டி­யான உரிய வைத்­திய வச­திகள் கிடைக்­காத நிலையில் மிக மோச­மான துன்ப நிலைக்கு ஆளாகி மறு­பி­றவியெடுத்து உயிர்­தப்பியுள்­ளனர். முள்­ளி­வாய்க்கால் சம்­ப­வங்­களில் தெய்­வா­தீ­ன­மாக உயிர் தப்­பிய பலரும் காய­ம­டைந்­த­வர்­க­ளும் அங்கு நிகழ்ந்த நிகழ்­வு­களின் நேரடி சாட்­சி­யாக இருக்­கின்­றனர். உயிர் தப்­பி­ய­வர்கள், குண்டுத் தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட தமது இரத்த உற­வி­னர்­க­ளது சட­லங்­களை எடுத்து அடக்கம் செய்­யக்­கூட முடி­யாத நிலையில்  தமது உயிர்­களைப் பாது­காப்­ப­தற்­காக ஓடி வந்­தி­ருந்­தார்கள்.

உயிர்ப்­பா­து­காப்­புக்கு வழி­யின்றி, ஏதி­லி­க­ளாகத் தவித்த நிலையில் மக்கள் கொல்­லப்­பட்ட துயர சம்­பவங்­களை நினை­வு­கூர்ந்து அங்கு இறந்­த­வர்­க­ளுக்­காக அஞ்­சலி செலுத்தும் நாளா­கவே மே மாதம் 18 ஆம் திகதி வடக்­கிலும்–கிழக்­கிலும் அனுஷ்டிக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால், முள்­ளி­வாய்க்­காலில் கொல்­லப்­பட்­ட­வர்­களை நினை­வு­கூர்­வ­தென்­பது தென்­னி­லங்­கையிலுள்ள பெரும்­பான்­மை­யான மக்­க­ளுக்கும் விரல் விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்கள் தவிர்ந்த ஏனைய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் விடு­த­லைப்­பு­லி­களை நினை­வு­கூர்­வ­தற்­கான நிகழ்­வா­கவே தெரி­கின்­றது.

மே மாதம் 18 ஆம் திகதி விடு­த­லைப்­பு­லி­க­ளையே தமிழ் மக்கள் நினைவு­கூர்­கின்­றார்கள். இதன்மூலம் யுத்­தத்தில் அழிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களை மீண்டும் உயிர்ப்­பிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளையே அவர்கள் மேற்­கொள்­கின்­றார்கள் என்று நிலை­மையைத் திரித்­துக்­கூறி இன­வாத ரீதி­யி­லான பெரி­ய­தொரு பிர­சா­ரமே தென்­ப­கு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இடை­யி­லேயே யுத்த மோதல்கள் இடம்­பெற்­றன. பயங்­க­ர­வா­தி­க­ளாக மிகைப்­ப­டுத்தி உருக்­காட்­டப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரா­கவே இரா­ணு­வத்­தினர் போரிட்­ட­தா­கவும் அந்த வெல்ல முடி­யாத எதி­ரி­களை உயிர்த்­தி­யாகம் செய்து அவர்கள் வெற்றிகொண்­டி­ருப்­ப­தா­கவும் பெரு­ம­ள­வி­லான பிர­சா­ரத்தை அன்­றைய அரசு மேற்­கொண்­டி­ருந்­தது. இதனால், விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டித்த இரா­ணு­வத்­தினர் சாக­சங்கள் புரிந்த வெற்­றி ­நா­ய­கர்­க­ளா­கவே சிங்­கள மக்கள் மத்­தியில் கரு­தப்­ப­டு­கின்­றார்கள். இன­வாத ரீதி­யி­லான இந்த அர­சியல் மனோ­பாவம் அல்­லது அர­சியல் உள­வியல், யுத்தம் முடி­வுக்கு வந்து 9 வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்ள போதிலும் இன்னும் மாற்­ற­ம­டை­ய­வில்லை.

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்தல் நிகழ்­வு­களைச் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்டு முன்­னைய கெடு­பி­டிகள் நீக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் இந்த வருடம் நிலை­மைகள் தலை­கீ­ழாக நேரிட்­டி­ருக்­கின்­றது. தடைகள் இல்­லாத போதிலும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலில் விடு­த­லைப்­பு­லி­களே நினை­வு­கூ­ரப்­பட்­டார்கள் என தெரி­வித்து அந் நிகழ்வை நடத்­திய வட­மா­காண சபையை உட­ன­டி­யாகக் கலைக்க வேண்டும், முத­ல­மைச்­சரைக் கைது செய்ய வேண்டும் என்ற கூக்­கு­ரல்கள் நாட்டின் தென்­ப­கு­தியில் எழுந்­தி­ருக்­கின்­றன.

யுத்­தத்தின் பின்னர், இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்­தையும் சமா­தா­னத்­தையும் சக­வாழ்­வையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ஒரு பக்கம் நல்­லி­ணக்க முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆயினும் மறு­பக்­கத்தில் அதற்கு நேர்­மா­றான இன­வாத அர­சியல் உள­வி­யலை எந்தள­வுக்கு வளர்த்­தெ­டுக்க முடி­யுமோ அந்தள­வுக்கு வளர்த்­தெ­டுப்­ப­தற்­கான பிர­சா­ரமும் அதற்­கி­சை­வான நட­வ­டிக்­கை­களும் மே மாதம் 18 ஆம் திக­திய நிகழ்­வு­களின் பின்னர் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதனால் “பாடு­வது தேவாரம், இடிப்­பது சிவன்­கோவில்” என்ற  நிலை­மையே நாட்டில் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

நினை­வேந்­தலை நடத்­து­வதில் நில­விய போட்டி 

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 18 ஆம் நாள் வடக்கில் துயரம் தோய்ந்த முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது. கடந்த முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லின்­போது பொருந்­தாத வகையில் அர­சியல் பேசப்­பட்­ட­தாகக் குற்­றஞ்­சாட்டி அங்கு பிர­தான உரை­யாற்­றிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதி­ராகக் கண்­டனம் தெரி­விக்­கப்­பட்­டிருந்தது.

தமிழ் மக்­களின் மிக மோச­மான துய­ர­ நா­ளா­கிய மே மாதம் 18 ஆம் நாள், அதுவும் அந்தத் துய­ரங்கள் நடந்­தே­றிய முள்­ளி­வாய்க்கால் மண்ணில் பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் உயிர்த்­தி­யாகம் செய்த இடத்தில் வட­மா­காண சபையின் ஏற்­பாட்டில் இடம்பெற்ற நினை­வேந்தல் நிகழ்வு ஓர் அர­சியல் நிகழ்­வா­கவே நடத்­தப்­பட்­டது என்ற தோற்­றப்­பாட்டை அன்­றைய நிகழ்வில் இடம்­பெற்ற குழப்ப நிலைமை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து நடப்பு வரு­ட­மா­கிய 2018 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை அர­சியல் கலப்­பற்ற நிகழ்­வாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் பெரும்­பா­லா­ன­வர்­க­ளு­டைய மனங்­களில் முனைப்புப் பெற்­றி­ருந்­தது. அதற்கு செய­லு­ருவம் கொடுப்­ப­தற்­கான முயற்­சிகள் யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­தால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. முள்­ளி­வாய்க்கால் நினைவுத் தூபி அமைந்­துள்ள வளா­கத்­தையும் சிர­மதா­னத்தின் மூலம் யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களே சுத்தம் செய்­தனர். அத்­துடன், “இம்­முறை நாங்­களே முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை நடத்தி முடிப்போம்..” என்று யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­தினர் அறிக்கை விட்­டி­ருந்­தனர். அவர்­களின் முயற்­சிக்கு பொது அமைப்­புக்­களும் வேறு சில அர­சியல் தரப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்­தனர்.

ஆயினும் வட­மா­கா­ண­ச­பையே தொடர்ச்­சி­யாக முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை நடத்தி வரு­கின்­றது. அதனடிப்­ப­டையில் இம்­மு­றையும் தாங்­களே அதனை நடத்தப் போவ­தாக மாகாண சபை­யினர் அறி­வித்­தி­ருந்­தனர். ஆயினும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இம்­முறை இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் உறு­தி­யாக இருந்­தது. தங்­க­ளா­லேயே நினை­வேந்தல் நடத்­தப்­படும் என்ற நிலைப்­பாட்­டையும் அது விட்­டுக்­கொ­டுக்­க­வில்லை. இருப்­பினும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை இம்­முறை யார் செய்யப் போகின்­றார்கள் என்­பதை அறிந்து கொள்­வதில் பொது­மக்­க­ளையும் அர­சி­யல்­வா­திகள் உள்­ளிட்ட ஏனைய தரப்­பி­ன­ரையும் ஆர்வம் மேலிடச் செய்யுமளவு இரு தரப்­புக்கும் இடை­யி­லான இழு­பறி நிலைமை காணப்­பட்­டது. இறு­தியில் ஒரு­வாறு இரு தரப்­பி­னரும் இணைந்து முத­ல­மைச்­சரின் தலை­மையில் நிகழ்வை நடத்­து­வது என்றும் நிகழ்வை நடத்­து­வதில் பங்­க­ளிப்பு செய்­வ­தற்கு முன்­வந்த முன்னாள் போரா­ளி­க­ளையும் இணைத்துக் கொண்டு செயற்­ப­டு­வது என்றும் முடி­வா­கி­யது.

என்ன நடந்­தது?

நினை­வேந்தல் நிகழ்­வுக்­கான இறுதி ஆயத்­தங்­களில் முன்னாள் போரா­ளி­களும் பல்­லைக்­க­ழக மாண­வர்­களும் இணைந்து ஈடு­ப­டு­வது என்ற முடி­வுக்கமைய நினை­வேந்தல் முற்­றத்தில் செய்­யப்­பட வேண்­டிய ஒழுங்­க­மைப்பு வேலை­களில் முன்னாள் போரா­ளிகள் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருந்­தனர். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் அதில் பங்­கேற்கச் சென்­றி­ருந்­தனர். ஆயினும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களே நினை­வேந்தல் நிகழ்வை ஆக்­கி­ர­மித்­தி­ருந்­ததைக் காண முடிந்­தது.

நினைவுச் சின்னம் அமைந்­துள்ள இடத்தைச் சூழ்ந்து, சீரு­டை­யி­லான ஓர் அணி போன்று கறுப்பு நிற உடை­ய­ணிந்த பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் சிலர் நின்­றி­ருந்­தனர். “நினைவுச் சின்­னத்­திற்குப் பாது­காப்பு வழங்­கவா அல்­லது அந்த நிகழ்­வுக்குத் தலைமை தாங்­கிய முத­ல­மைச்­ச­ருக்குப் பாது­காப்பு வழங்­கவா அவர்கள் நின்­றி­ருந்­தனர்..?” என்று கூடி­யி­ருந்­த­வர்கள் மனங்­களில் கேள்வி எழும் வகையில் அந்தச் சூழல் அமைந்­தி­ருந்­தது.

நிகழ்வு என்­னவோ முத­ல­மைச்­சரின் தலை­மை­யில்தான் நடந்­தது என்­றாலும் யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியத் தலை­வரே தலைமை தாங்கி இருந்­த­தையும் அவரை மைய­மாகக் கொண்டு பல்­க­லைக்­க­ழக கறுப்பு நிற சீரு­டையில் காணப்­பட்ட மாண­வர்கள் செயற்­பட்­ட­தையும் சூழ்ந்­தி­ருந்­த­வர்­க­ளால் விசே­ட­மாக அவ­தா­னிக்­காமல் இருக்க முடி­ய­வில்லை.

முத­ல­மைச்­ச­ருடன் நினைவுத் தூபி அமைந்­துள்ள இடத்­திற்குச் சென்ற பாராளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ரா­ஜா­வுக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அனு­மதி வழங்­க­வில்லை. அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது என்று ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்த­தன் கார­ண­மா­கவோ என்­னவோ நினை­வேந்தல் முற்­றத்­திற்கு வருகை தந்­தி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட அர­சியல் முக்­கி­யஸ்­தர்கள் எவரும் வேலி வடி­வத்தில் பாது­காக்­கப்­பட்­டி­ருந்த நினைவுச் சின்­னத்­திற்கு அருகில் செல்­ல­வில்லை.

பதுங்கு குழிகள் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் ஒன்றில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி தனது பெற்­றோ­ரையும் உட­னி­ருந்த மாமா­வையும் கோர­மான முறையில் பறி­கொ­டுத்து  விபரம் அறி­யாத குழந்தைப் பரு­வத்தில் தானும் காய­ம­டைந்­த­வ­ரான கே.விஜிதா என்பவர் ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­வாறு பிர­தான நினை­வேந்தல் சுடரை ஏற்­றி­னார். அந்த சம்­ப­வத்தில் அவ­ருடன் இருந்த இளைய சகோ­தரன் தெய்­வா­தீ­ன­மாக உயிர்­தப்­பி­யி­ருந்தார்.

பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியத் தலை­வ­ரி­ட­மி­ருந்து பெற்ற சுடரை முத­ல­மைச்சர் கைய­ளிக்க, அதனைப் பெற்று பிர­தான சுடர் ஏற்­றப்­பட்­டது. முத­லா­வ­தாக விஜிதா மலரஞ்­சலி செலுத்­தி­யதைத் தொடர்ந்து முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் மல­ரஞ்­சலி செலுத்­தினார். பிர­தான சுட­ரேற்­றப்­பட்­ட­போது, முள்­ளி­வாய்க்கால் நினைவுத்தூபி அமைந்­துள்ள வளா­கத்தில் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் சீராக நிறு­வப்­பட்­டி­ருந்த இடங்­களில் இறுதி யுத்­தத்­தின்­போதும் யுத்த சூழ­லிலும் பலி­யா­கிப்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் கண்ணீர் சிந்தி அழுது அரற்றி உணர்வு மேலிட சுட­ரேற்றி அஞ்­சலி செலுத்­தினர்.

சுட­ரேற்றி மலரஞ்சலி செலுத்­தப்­பட்­டதும் முத­ல­மைச்சர் உரை­யாற்­றினார். நினைவுத் தூபி அருகில் எந்த இடத்தில் இருந்து அவர் உரை­யாற்­று­வது, அதற்­கான மேசையை எவ்­வி­டத்தில் வைப்­பது என்­பதில் அங்கு குழு­மி­யி­ருந்த மாண­வர்கள் தடு­மா­றிக்­கொண்­டி­ருந்­தார்கள். அவ்வி­டத்தில் சூழ்ந்­தி­ருந்த செய்­தி­யா­ளர்கள் முத­லமைச்சரு­டைய உரையைத் தெளி­வாகப் பதிவு செய்­வ­தற்கும் காணொளி மற்றும் புகைப்­படம் எடுப்­ப­தற்கும் சிரமம் அடைய நேர்ந்­தி­ருந்­தது. முத­ல­மைச்சர் உரை­யாற்­று­வ­தற்­கான ஒலி­வாங்­கியை எங்கு வைப்­பது என்­பதில் அவர்­களும் தீவிர அக்­கறை காட்­டி­னார்கள். இதனால் முத­ல­மைச்­சரின் உரை இடம்­பெ­று­வ­தற்கு சீரான ஏற்­பா­டின்றி சில நிமி­டங்கள் தாம­த­மா­கின. உணர்­வு­பூர்­வ­மாக சோகம் சூழ்ந்த அந்த இடம் உரை­யாற்­று­வ­தற்­கான ஏற்­பாட்­டுக்­காக இட­றிக்­கொண்­டி­ருந்­தது.

இத­னால்­தானோ என்­னவோ சுட­ரேற்றி மல­ரஞ்­சலி செலுத்­தி­ய­போ­திலும் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஆன்ம சாந்­திக்­கான அக­வ­ணக்கம் செய்­யப்­ப­ட­வில்லை. நிகழ்­வு­களை ஒழுங்­க­மைத்­தி­ருந்த பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அதற்­கான நிகழ்ச்சி நிரல் இல்­லாமல் அலை­மோ­தி­யதன் விளை­வா­கவே இதனைப் பார்க்க முடிந்­தது. இத்­த­கைய ஒரு நிலை­யி­லேயே முள்­ளி­வாய்க்கால் நினைவுத்தூபி அமைந்­துள்ள இடத்திலிருந்து செயற்­பட்­டி­ருந்த முன்னாள் போரா­ளி­யான துளசி, அந்த இடத்திலிருந்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் சிலரால் தள்ளிச் சென்று வெளி­யேற்­றப்­பட்டார். இதனை முத­லமைச்சர் கவ­னித்­தாரோ இல்­லையோ தெரி­ய­வில்லை. ஆனால், அஞ்­சலி நிகழ்வில் கூட்­டாகப் பங்­கேற்­றி­ருந்த முக்­கி­ய­மான ஒருவர் அந்த இடத்திலிருந்து இங்­கி­த­மில்­லாத முறையில் வெளி­யேற்­றப்­பட்­டதை முதலமைச்சர் கண்­டு­கொண்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை. இச் சம்­பவம் பல­ரையும் மனம் நோகச் செய்­தி­ருந்­தது. சீற்­ற­மடை­யவும் செய்­தி­ருந்­தது. இருப்­பினும் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட துளசி உட்­பட அனை­வரும் அமைதி காத்­தனர். துயரம் தோய்ந்த அந்த நிகழ்வில் “தங்­களால் குழப்பம் ஏற்­பட்­டது அல்­லது சல­ச­லப்பு ஏற்­பட்­டது..” என்ற பழிச்­சொல்­லுக்கு ஆளா­கி­விடக் கூடாது என்ற எண்ணம் அவர்­க­ளிடம் மேலோங்­கி­யி­ருந்­தது என்­பதைப் பின்னர் தெளி­வாக அறிந்து கொள்ள முடிந்­தது.

நினை­வேந்­தலின் தன்மை

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் என்­பது ஒரு சாதா­ரண நிகழ்­வல்ல. அது தமி­ழர்­களின் தேசிய அர­சியல் சோகம் சார்ந்­தது. காலத்­தாலும் அடக்­கு­முறைச் செயற்­பா­டு­க­ளி­னாலும் தடுத்து நிறுத்­தி­விட முடி­யாத ஆழ­மான வலிமை கொண்­டது. பாது­காப்­பின்றி அலைக்­கழிந்து, அஞ்சிப் பதைபதைத்து, உடலும் ஆவியும் துடி­து­டிக்க அவ­ல­மாக மடிந்து போன ஆயி­ரக்­க­ணக்­கா­னவர்­களின் ஆன்­மாக்கள் அமை­தி­யின்றி அலை­மோ­து­கின்ற ஓரி­டத்தில் நிகழ்­கின்ற ஒரு நினை­வேந்­த­லாகும்.

அது மனதைப் பிழிந்து வாட்­டு­கின்ற சோகம் நிறைந்­தது. அமை­தியை வேண்டி ஆறாத துய­ரத்­துடன் நெஞ்­சங்கள் திடுக்­கி­டத்­தக்க வகையில் நினை­வு­கூர்­கின்ற ஒரு புனி­த­மான நிகழ்­வாகும்.

இந்த நிகழ்வில் அர­சியல் இருக்கக் கூடாது என்ற தீர்­மானம் ஏற்­பு­டை­யது. வர­வேற்று ஆத­ரிக்க வேண்­டி­யது. ஆயினும் கட்சி அர­சியல் இருக்கக் கூடாது என்­பதே அதன் உள்­ளர்த்­த­மாகும். தேர்தல் கால நலன்­களைக் கருத்­தில் ­கொண்ட அர­சி­ய­லா­கவோ அல்­லது எதிர்­கால சுய­நல தேவை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சி­ய­லா­கவோ அது அமையக் கூடாது என்­பதில் தெளி­வாக இருக்க வேண்டும். ஏனெனில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலில் அர­சியல் இருக்கக் கூடாது. அர­சியல் கலக்கக் கூடாது என்ற நிலைப்­பாடும் தன்­ன­ளவில் ஓர் அர­சி­ய­லாகும். கட்சி அர­சியல் மற்றும் சுய­லாப அர­சியல் என்­ப­வற்றை இலக்­காகக் கொண்ட குறு­கிய நோக்­க­முள்ள அர­சி­ய­லுக்கு அப்பால் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் என்­பது தமிழ் மக்­களின் தேசிய, சமூக, கலை, கலா­சார ஆட்சி உரிமை சார்ந்த அர­சி­யலை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. அந்த அர­சியல் வெளி பரந்­து­பட்­டது. விசா­ல­மா­னது.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலில் அர­சியல் இருக்கக் கூடாது. அர­சி­யல்­வா­திகள் எவரும் பங்­கேற்­கக்­கூ­டாது என்று வரை­யறை செய்­தி­ருந்த பல்­க­லைக்­க­ழக மாணவர்களின் செயல் அர­சி­ய­லிலும் பார்க்க அதிக பரி­மாணம் கொண்­டது. தமிழ்த் தேசிய அர­சி­யலின் ஓர் அங்­க­மாக பல்­க­லைக்­க­ழக அர­சியல் இருக்­க­லாமே தவிர, அந்தத் தேசிய அர­சி­யலின் தலை­மை­யாக மாண­வர்­களின் அர­சியல் வகி­பாகம் கொண்­டி­ருக்க முடி­யாது.

நடந்து முடிந்த முள்­ளி­வாய்க்­காலின் கோர சம்­ப­வங்­களை நினை­வு­கூர்ந்து, அவற்றில் பலி­யாகிப் போன­வர்­களின் இறப்­பினால் ஏற்­பட்ட ஆறாத துயரம் வடிந்­தோ­டு­வ­தற்­கான ஒரு வடி­கா­லாக முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் அமைய வேண்­டி­யது அவ­சியம். ஆறாத மனத்­து­ய­ரினால் வாழ்க்­கையில் நடைப்­பி­ண­மாக மாறி­யுள்ள ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­களின் உள­வியல் ஈடேற்­றத்­திற்கும் துய­ரங்­களைத் தாங்கிக் கொண்டு சவால்­களை எதிர்­கொண்டு வாழ்க்­கையில் எதிர் நீச்­ச­ல­டிப்­ப­தற்­கான மனோதிடத்தை முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலின் ஆற்­றுப்­ப­டுத்தல் வழங்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

முள்­ளிவாய்க்கால் அவலம் என்­பது ஒரு சமூ­கத்தின் கூட்டுத் துயரம். அந்தத் துயரம் வடிந்து தணி­வ­தற்கு சமூகம் சார்ந்த கூட்டு நினை­வேந்தல் அவ­சியம். மனங்­களில் மாறாத துயர வடுக்­க­ளாக அமைந்­து­விட்ட முள்­ளி­வாய்க்கால் படு­கொ­லை­களின் துய­ரங்கள் கூட்டுச் செயற்­பாட்டின் மூல­மா­கவே களைந்து தெளிய முடியும். அதே­வேளை, ஆறூத துய­ரத்தைப் போலவே தீராத பிரச்­சி­னை­யாகத் தொடர்ந்து மனங்­களை அழுத்திக் கொண்­டி­ருக்­கின்ற அர­சியல் உரிமை மறுப்பு என்ற அடக்­கு­மு­றை­களைத் தகர்த்­தெ­றி­வ­தற்­கான அர­சியல் ரீதி­யான உறு­தி­யையும் உள வலி­மை­யையும் இந்த நினை­வேந்தல் நிகழ்வின் ஊடாகப் பெற்றே ஆக வேண்டும். அந்த வகையில் அதற்­கு­ரிய தேசிய அர­சியல் அவ­சியம். அது அங்கு புடம்­போ­டப்­பட வேண்­டி­யதும் முக்­கியம்.

நடந்­ததும் நடக்க வேண்­டி­யதும்

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வை­யொட்டி, மே மாதம் 18 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு மக்கள் தாங்கள் தாங்கள் இருக்கும் இடங்­களில் எழுந்து நின்று அக­வ­ணக்கம் செலுத்த வேண்டும், அமை­தி­யான பிரார்த்­த­னையில் ஈடு­பட வேண்டும் என்று முத­ல­மைச்சர் அறிக்­கை­யொன்றில் பகி­ரங்­க­மாகக் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். ஆனால், பிர­தான நினை­வேந்தல் நிகழ்வு இடம்­பெற்ற முள்­ளி­வாய்க்­காலில் அக­வ­ணகக்ம் செலுத்­தப்­ப­ட­வில்லை. இறந்­த­வர்­களின் ஆன்ம சாந்­திக்­காக சில வினாடி­க­ளா­வது கண்­களை மூடி அமை­தி­யாக பிரார்த்­தனை செய்­ய­வில்லை.

நினை­வேந்தல் நிகழ்­வுக்­கான நிகழ்ச்­சிகள் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் நிரல் ஒழுங்­க­மைப்பில் இடம்­பெற்­றி­ருக்­கலாம். ஆனால், சாதா­ரண ஒரு நிகழ்­வில்­கூட ஆரம்­பத்தில் மங்­கல விளக்­கேற்­ற­லுடன் அமைதிப் பிரார்த்­தனை செய்­வது எம்­ம­வர்­களின் பாரம்­ப­ரிய வழக்கம். முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லின்­போது பாரம்­ப­ரிய பழக்­கத்­திற்கமைய அமைதிப் பிரார்த்­தனை செய்­யப்­ப­ட­வில்லை. அக­வ­ணக்கம் இடம்­பெ­ற­வில்லை.

வட­மா­காண சபையும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் முன்னாள் போரா­ளி­களும் இணைந்து முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நடத்­தப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் முன்­னி­லையில் இருந்து செயற்­பட்ட பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் முக்­கி­யஸ்­தர்கள் அந்த நிகழ்வை முழு­மை­யான ஆக்­கி­ர­மிப்பு நோக்கில் நடத்­தி­யி­ருந்­தமை பல­ரையும் முகம் சுளிக்கச் செய்­தி­ருக்­கின்­றது. மனம் வருந்­தவும் செய்­தி­ருக்­கின்­றது.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வில் கடந்த வருடம் அர­சியல் ரீதி­யான தலை­யீடு இடம்­பெற்­றி­ருந்­தது என்ற ஒரே கார­ணத்­திற்­காக வட­மா­காண சபை­யி­ன­ருக்கோ அல்­லது முன்னாள் போரா­ளி­க­ளாக இருக்­கலாம், அல்­லது வேறு யாரா­கவும் இருக்­கலாம், அவர்­களால் அர­சியல் கலப்­பின்றி அந்த நிகழ்வை நடத்த முடி­யாது என்று தீர்­மா­னித்துச் செயற்­பட முற்­ப­டு­வது அல்­லது செயற்­ப­டு­வது ஏற்­பு­டை­ய­தல்ல.

நெருக்­க­டிகள் மிகுந்­தி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் 2010 ஆம் ஆண்டு வவு­னி­யாவில் அப்­போ­தைய வவு­னியா பிர­ஜைகள் குழு மற்றும் பல்­வேறு தரப்­பி­ன­ரு­டைய ஒத்­து­ழைப்­புடன் மோச­மான உயிர் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் அனுஷ்டிக்­கப்­பட்­டது. இதற்கு வன்னி மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் மிகுந்த துணி­வோடு செயற்­பட்­டி­ருந்தார்.

முதல் நினை­வேந்தல் நிகழ்வு நடை­பெ­று­வ­தற்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த மண்­ட­பத்தில் அதனை நடத்த முடி­யாது என்று இறுதி நேரத்தில் மண்­ட­பத்­திற்குப் பொறுப்­பா­ன­வர்கள் கைவி­ரித்­து­விட்­டார்கள். மண்­டபக் கத­வுகள் இறுக்கி மூடப்­பட்டு எவரும் உள்ளே நுழைய முடி­யா­த­வாறு தடுக்­கப்­பட்­டி­ருந்­தது. புல­னாய்­வா­ளர்­களின் நேர­டி­யான அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனால் அப்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அறிவிக்கப்பட்டவாறு நடைபெறுமா என்பது சந்தேகத்திற்குரியதாகியது. இருப்பினும் இறுதி நேர ஏற்பாடாக வவனியா நகரசபை மண்டபத்தில் எண்ணிக்கையில் அதிகூடிய புலனாய்வாளர்களுடனும் பாதிக்கப்பட்ட மக்களில் சிலரும் மற்றும் பொதுஅமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் அனைவரையும் புலனாய்வாளர்கள் பல கோணங்களில் படம் பிடித்தும் காணொளிக் காட்சிகளில் பதிவு செய்தும் எடுத்துச் சென்றார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களாக 2015 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. மாகாணசபை இயங்கத் தொடங்கியதையடுத்து 2016 ஆம் ஆண்டு முதன்முறையாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடத்தப்பட்டது.

இதேபோன்று யாழ். பல்கலைக்கழகத்தின் உள்ளே அன்றைய மாணவர்கள் மோசமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருந்தார்கள். இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதற்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இதேபோன்று கிளிநொச்சியிலும் பின்னர் முல்லைத்தீவிலும் அருட்தந்தையர்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்து ஆலயங்களிலும் ஆத்ம சாந்திப் பூஜையுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.    கிழக்கு மாகாணத்தில் பலராலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் யார் பங்கேற்க முடியும், யார் பங்கேற்க முடியாது என்பதைத் தீர்மானிப்பதற்கு எவருக்குமே அதிகாரம் கிடையாது. எனவே, நடந்து முடிந்த நிகழ்வில் விமர்சிக்கப்படுகின்ற அளவுக்கு இடம்பெற்றிருந்த குறைகள் அடுத்த நினைவேந்தலின்போது இடம்பெறக்கூடாது என்பதை இப்போதே உறுதி செய்து கொள்ள வேண்டும். யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்காகவே நடத்தப்படுகின்றது என்ற பேரினவாதிகளின் இனவாத அரசியல் மனோபாவம் உயிர்த்திருக்கின்ற சூழலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் ரீதியான உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு திறம்பட திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும்.

மோசமடைந்து செல்கின்ற நாட்டின் அரசியல் சூழலில் இது மிகவும் அவசியம். இது ஒரு வரலாற்றுத் தேவை என்றே கூற வேண்டும்.

Leave a comment