இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது!

672 0

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஜே 233 கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லைப் பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவத்தினர் விடுவிக்கப்பட்ட பகுதிகளை தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு அடையாளப்படுத்தினார். அப்பகுதிக்கு விரைந்த மக்கள் தமது வீடுகளுக்கோ, ஒழுங்கைகளுக்கோ செல்ல முடியாத நிலையில் பற்றைகள் மண்டிக் காணப்படுகிறது.

இராணுவத்தினர் பயன்படுத்திய தனியார் வீதியூடாகச் சென்று தமது காணிகளை பார்வையிட்டனர். இதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையூடான மாங்கொல்லை காணி வீடுகள் விடுவிக்கப்படவில்லை அவை தொடர்ந்தும் இராணுவத்தினரின் பாவனையிலேயே இருக்கின்றன.

இதனால் காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் கோயில் பின்பகுதியூடாகவோ, மாம்பிராய் உள் வீதியூடாகவோ விடுவிக்கப்பட்ட காணிக்குள் போக முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விடுவிக்கப்பட்ட தமது சொந்த காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறுவதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச செயலக மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Leave a comment