கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும் தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும் 22.05.2018 அன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.
தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த 22.05.2018 அன்று காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
குறிப்பாக இப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவற்துறையினர் குறிசூட்டுத்தாக்குதல் நடத்தியதன் மூலம் பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஜனநாயக வழியிலான போராட்டத்தை துப்பாக்கி முனையில் நசுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் போராட்டமும், கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கான நினைவஞ்சலியும் நடைபெற்றது .