தூத்துக்குடி போராட்டத்தில் பலியானவர்களுக்கு நீதி பெற்றுத்தர அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிய ‘மய்யம் விசில்’ செயலிக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் எழுப்பும் கேள்விகளுக்கு, தமிழக அரசால் பதில் சொல்ல முடியுமா? என்று கூறி கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். இதேபோல அதனை அறிக்கையாகவும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு இதுவரை தமிழகத்திலோ இந்தியாவிலோ கேட்டும், அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு துயரச்சம்பவம் அண்மை காலத்தில் நடந்தேறியது இல்லை. இந்த சம்பவம் குறித்து எந்த விளக்கமும் அளிக்காத தமிழக அரசின் மவுனம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவே உள்ளது.
* யார் இந்த துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது?
* துப்பாக்கி சூட்டுக்கு அனுமதியளிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்ன?
* துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விவரங்களும் குண்டுகளின் விவரங்களும் இன்னும் ஏன் அளிக்கப்படவில்லை?
* இறுதியாக துப்பாக்கி சூடு நடைபெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் ஏன் இன்னும் தெரியப்படுத்தவில்லை?
* துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் விவரங்களும், காயமடைந்தவர்களின் விவரங்களும் ஏன் அளிக்கப்படவில்லை?
* இரண்டாம் நாளில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் குறித்து முழுவிவரம் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாதது ஏன்?
இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு இதுவரை விடை அளிக்கவோ, விளக்கம் அளிக்கவோ இல்லை.
போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் மீது பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாகவே இருக்கிறது. எனவே அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் தண்டனை நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்தோ அல்லது பணியில் இருந்து நீக்கம் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், முழு பொறுப்பான அரசை நடத்தும் அரசியல் சக்திகளையும் தண்டனைக்கு உள்ளாக்குவது மிகவும் அவசியம்.
13 பேரின் உயிரிழப்புக்கு எந்தவித பொறுப்பு ஏற்காமல் தட்டிக்கழிப்பதும், அதுகுறித்த கேள்விகளுக்கு பதிலும் சொல்லாமல் இருப்பது மக்களாட்சியின் மாண்புக்கு உகந்தது அல்ல. மக்கள் நீதி மய்யம் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில், தொடர்ந்து எந்தவித சுணக்கமும், தொய்வும் இன்றி தகுந்த ஆதாரங்களையும், தகவல்களையும் சேகரித்துக்கொண்டே இருக்கும். இந்த மண்ணையும், மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளில் மக்களின் குரலாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இந்த கொள்கையின் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் தனது ‘மய்யம் விசில்’ செயலி மூலமாக தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அக்கறையுள்ள பொதுமக்கள் மூலம் கிடைக்கப்பெற்ற புகார்களுக்கு, தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம், கோர்ட்டுகள், தமிழக கவர்னர், ஜனாதிபதி வழியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி வாழ் சகோதர, சகோதரிகளின் தோளோடு தோள் நின்று இந்த துயர சம்பவத்தில் பலியான போராட்டக்காரர்களுக்கு நீதி பெற்று தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என உறுதி அளிக்கிறது.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.