சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தில் 3 வழித்தடங்களுக்கு ஒப்புதலையும், நிதி பங்களிப்பையும் மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
சென்னை எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையே சுரங்கப்பாதையில் ரெயில் போக்குவரத்து தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
54 கிலோ மீட்டர் நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் தற்போது சென்னை பெருநகர் பகுதியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு போதாது என்பதை உணர்ந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் 3 மெட்ரோ ரெயில் வழித்தடங்களை செயல்படுத்த முடிவு செய்தார்.
அதன்படி ரூ.79 ஆயிரத்து 961 கோடி மதிப்பீட்டில் 107.55 கிலோ மீட்டர் நீளத்தில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாதவரம் முதல் சிறுசேரி வரையில் ஒரு வழித்தடமும், சென்னை புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை ஒரு வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடமும் என 3 மெட்ரோ ரெயில் வழித்தடங்களை செயல்படுத்துவதற்கு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடனுதவி பெறுவதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தில் 3 வழித்தடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பு ஆகியவற்றை விரைவில் வழங்க வேண்டும்.
3 வழித்தடங்களில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சிறுசேரி வழித்தடத்தில் மாதவரம்- கோயம்பேடு வரையிலுமான வழித்தட பகுதிக்கு மட்டும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடனுதவி வழங்க முன்வந்துள்ளது. இதற்கான நிதி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் இருந்து பெறப்பட்டவுடன் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். 17.12 கிலோ மீட்டர் நீளத்திலான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தட பகுதிக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி பெற அரசு முயற்சியை எடுத்து வருகிறது.
கோவை மாநகரத்தில் புதிய மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான நிதியை ஜெர்மனி நிதி நிறுவனமான ‘கே.எப்.டபிள்யூ’ வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை மாற்றி அமைத்து, கலங்கரை விளக்கம் முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை எடுத்து செல்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதுதவிர, விமான நிலையத்துடன் முடிவடையும் மெட்ரோ ரெயில் பாதையை வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்து சென்னை நகரில் உள்ள துரித போக்குவரத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.