பொம்மைக் குட்டியொன்றின் மரணம்!

3429 0

1
காட்டு வெளிகளில் தெரியும்
நிலவோடும் நட்சத்திரங்களோடும்
விளையாடித் திரிந்த பொம்மைக் குட்டியொன்றை
நிலம் விழுங்க வந்த பேய்கள்
கொன்றுவிட்டுப் போயிருக்கின்றன.

தமது குழந்தையின் புன்சிரிப்பை
மென்மையான கரங்களை, பாதங்களை
தொட்டுணர்ந்து மகிழாத பேய்களே
பொம்மைக்குட்டியைக் கொடூரமாய்க் கொன்றிருக்கின்றன

கைகளையும் கால்களையும்
அகல நீட்டி எறிந்தபடி
வீழ்ந்து கிடக்கிறது பொம்மைக் குட்டி

2
வானம் வெடித்துச் சிதறி
எல்லாத் திசைகளிலும்
இருள் கவிந்திருந்த பொழுதில்

நிலம் ஊறக் கொட்டிய குருதியில்
நிலவும் நட்சத்திரங்களும்
இறந்து கிடந்த தருணத்தில்

பெரும் கனவைச் சுமந்த தாயிடமிருந்து
பிரிந்த பொம்மைக்குட்டி
பேய்களோடு தனித்தே போராடி வீழ்ந்திருக்கிறது.

3
பொம்மைக்குட்டியின் மூடிய விழிகளில்
வீழ்ந்தழுதது சமுத்திரம்
மேனியை கட்டியணைத்தது தாய் நிலம்

வெள்ளைக் கொடி
பொம்மைக்குட்டியின்; பிணத்தின் மீது
குருதிக்கறையோடு கிழிந்திருந்தது

இனியொரு காலமிருந்தால்
கொல்லும் ஆயுதங்களற்ற உலகில்
பொம்மைக்குட்டிகளும், நிலவும், நட்சத்திரங்களும்
மீண்டுமாய்ப் பிறக்கட்டும்.

– சுதேசிகன்.

இன்று காணாமலாக்கப்பட்ட குழந்தைகளுக்கான சர்வதேச தினம்.

Leave a comment