கிளிநொச்சி, ஊற்றுப்புலம் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்ற பிரதேசத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் அதனை அழிக்கும் நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொள்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக இராணுவத்தினர் குறித்த பகுதிகளுக்கு மாலை வேளைகளில் சென்று வருதாகவும் அண்மையில் பிரிகேடியர் தர இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினரும் அப்பகுதிக்கு சென்றதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொடர்ந்து கூறுகையில்,
குறித்த பிரதேசம் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும் இங்கு அகழ்வு பணிகள் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாதென அறிவித்தல் பலகையும் காணப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அகழ்வுப் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன் பௌத்த துறவியுடன் இராணுவத்தினர் சில தடவைகள் குறித்த பிரதேசத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால் அதனை பெரிதாக நினைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது வரலாற்று எச்சங்கள் உள்ள பகுதிகள் அகழப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு காணப்படுகிறதுமையானது தமிழர் வரலாற்று எச்சங்களை அகற்றிவிட்டு அந்த இடங்களில் பௌத்த பண்பாட்டை பிரதிபலிக்கும் பொருட்களை புதைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனரா என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தம்மால் காட்டின் உட்பகுதிக்கு சென்று பார்வையிட முடியாத நிலைமை காணப்படுகின்றமையால் வேறு ஏதும் இடம்பெற்றுள்ளதா என தெரியவில்லை.
ஊற்றுப்புலம் கிராமத்திற்கு ஊற்றுப்புலம் என பெயர் வர காரணமாகவுள்ள வற்றாத அதிசய கிணறு, கருங்கல் தூண்கள், பல நூற்றாண்டுகள் பழமையான செங்கல் மேடுகள், போன்றன கிராமத்தின் எல்லை புறத்தில் காணப்படுகிறது.
மேலும் கிராமத்தின் காட்டுப்பகுதிக்குள் மேலும் பல வரலாற்று எச்சங்கள் இருக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
இந்நிலையில் இராணுவத்தினரின் இச் செயற்பாடுகள் தமது மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று எச்சங்களை இல்லாது அகற்றிவிட்டு பௌத்த வரலாற்று எச்சங்களை புதைத்து இது பௌத்த பண்பாட்டு பிரதேசங்கள் என்றும் இங்கு பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றதென்றும் தெரிவித்து எதிர்காலத்தில் வரலாற்றையே மாற்றக்கூடும் எனவும் அம்மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.