குடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்!

226 0

மத்தியப்பிரதேச மாநிலத்தில், சத்தர்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர் கடந்த 18 மாதங்களாக ஒற்றைஆளாய் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மத்தியப்பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டம், பிரதப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் லோதி(வயது70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பிரதப்புரா கிராமத்தில் தனது சகோதரர் ஹல்கே லோதியின் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்குச் சொந்தமாக சில ஏக்கர்கள் நிலம் இருக்கிறது.

பருவமழை பொய்ப்பு போன்ற காரணங்களால்,

பருவமழை பொய்ப்பு போன்ற காரணங்களால், விவசாயத்தை முறையாகச் செய்யமுடியவில்லை. கோடைகாலத்தில் குடிப்பதற்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. இதையடுத்து, சீதாராம் லோதி தனது நிலத்தில் கிணறு வெட்டத் தீர்மானித்தார்.

 கடந்த 2015-ம் ஆண்டு பிறபகுதியில் கிணறு வெட்ட சீதாராம் லோதி தொடங்கினார். தொடக்கத்தில் ஒற்றை ஆளாக வேலையைத் தொடங்கியபோது, குடும்பத்தில் உள்ளவர்கள் பலரும் எதிர்த்தனர், வசைபாடினார்கள். ஆனால், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், தொடர்ந்து கிணறு வெட்டும் பணியை சீதாராம் லோதி தொடர்ந்தார்.

2015ம் ஆண்டுபிற்பகுதியில் கிணறு வெட்டத் தொடங்கியவர் 2017ம் ஆண்டில் ஏறக்குறைய 18 மாதங்களுக்குப் பின், 33-வது அடி வெட்டும் போது கிணற்றில் நல்ல தண்ணீர் ஊற்றெடுக்கத் தொடங்கியது. இதனால், சீதாராம் லோதியும், சகோதரரின் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. அடுத்த பருவமழையின்போது, கிணற்றில் மண் சரிந்து மூடிவிட்டது. இதனால், சீதாராம் விரக்தி அடைந்தார்.

இதையடுத்து, கிணற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்தத் தொடங்கினார். ஆனால், இந்த முறை சீதாராமுக்கு உடன் குடும்ப உறுப்பினர்கள் யாரும் உதவவில்லை. தனி ஆளாகக் கிணற்றின் மண்ணை வெட்டி, அப்புறப்படுத்தினார். ஆனால், சீதாராம் லோதியின் உழைப்பையும், மனஉறுதியையும் பார்த்த குடும்பத்தினர் உதவினார்கள்.

கிணறு வெட்டுவதற்கு மத்திய அரசு மானியமாக ரூ.1.80 லட்சம் வழங்குவதாக அறிவித்தும், சீதாராம் லோதிக்கு அதை வழங்கவில்லை. தன்னுடைய சொந்த செலவில், குடும்பத்தாரின் உதவியுடன் கிணற்றை வெட்டி, அகலப்படுத்தி அதில் தண்ணீரையும் கொண்டுவந்துவிட்டார் சீதாராம்.

இது குறித்து சீதாராம் லோதி கூறுகையில், கோடைக்காலம் வந்துவிட்டால் குடிப்பதற்கு கிராமத்தில் தண்ணீர் இருக்காது, விவசாயத்துக்கும் தண்ணீர் இருக்காது. ஆதலால், என்னுடைய நிலத்திலேயே கிணறுவெட்ட தீர்மானித்தேன். ஆனால், எனது குடும்பத்தினர், இது கடினமான பணி உங்களால் செய்ய முடியாது என்று தடுத்தனர்.

 ஆனால், தண்ணீர் கொண்டுவராமல் என் முயற்சி ஓயாது என்று தெரிவித்துவிட்டேன். 18 மாதங்கள் கடுமையாக முயற்சித்து, 33 அடி வெட்டும்போது தண்ணீர் கிடைத்தது. அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆனால், இந்த மகிழ்ச்சி சிறிதுநாட்கள்தான் நீடித்தது. பருவமழையில் மண் சரிந்து கிணறுமூடிவிட்டது.

ஆனால், நான் மனம் தளரவில்லை கிணற்றில் இருக்கும் மண்ணை அப்புறப்படுத்தி, ஆழப்படுத்தி இப்போது தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

சீதாராம் சகோதரர் ஹல்கே லோதி கூறுகையில், கிணறுவெட்டுவது கடினமான பணி என்று என் சகோதரர் சீதாராமிடம் கூறியும் அவர் பிடிவாதமாக கிணறுவெட்டுவேன் எனத் தெரிவித்துவிட்டார். ஒரு கட்டத்தில் அவரின் வயது காரணமாக பணியை விட்டுவிடுங்கள் என்று அவரிடம் சண்டையிட்டேன். ஆனால், அவர் பிடிவாதமாக மறத்துவிட்டார். அதனால், குடும்பத்தினர் அனைவரும் அவருடன் சேர்ந்து கிணறுவெட்டுவதில் உதவினோம்.கடைசி வரை அரசு எங்களுக்கு நிதியுதவி தரவில்லை எனத் தெரிவித்தார்.

Leave a comment