ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியதாகவே அமையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக தேர்தலில் மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறிவிட்டன. மதசார்பற்ற ஜனதா தளம் கணிசமான இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதால் தொங்கு சட்டசபை உருவாகிவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் நடுவர் நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பாகும். ஆனால் மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக ஆணையத்தை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியதாகவே அமையும். கடந்த மாதம் 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்தது. ஆனால் 2 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு சில நிலைப்பாட்டை மாற்றியது ஏன் என்று புரியவில்லை.
‘நீட்’ தேர்வு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகும். அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை பொது பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு மாநில பட்டியலில் இணைக்க வேண்டும்.
மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் முதுநிலை கல்விக்கான இடங்கள் மிகவும் குறைவாக இருப்பதால், மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதை பயன்படுத்தி தான் தனியார் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கல்வி கட்டணங்களை வசூலிக்கிறது. அதனால் கல்வி கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்.
சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், காவிரி பிரச்சினை குறித்தும், அதில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. தலைமையில் 9 கட்சிகள் கூடி பேசி செயல்பட்டு வருகிறோம். இந்நிலையில் கமல்ஹாசன் கூட்டிய கூட்டத்திற்கு அழைப்பு வந்தது. ஆனால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
முன்னதாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் பலர் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்களது சாவில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழக்கிறார்களா? என்பது சந்தேகமாக உள்ளது.
காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் இதை விசாரணை நடத்தினால், உண்மை வெளிவராது. எனவே தனி விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். காவல்துறைக்கென தனி சங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
கர்நாடகவில் எடியூரப்பா பதவியேற்றபோதே அவரது பதவி காலம் ஆயுள் மிகவும் குறுகியது என கூறியிருந்தேன். அது தற்போது உண்மை ஆகி உள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தர முடியும். தற்போது குமாரசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இது மத்தியில் ஆளும் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மிகப்பெரும் அடியாக விழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.