ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 தொழிலாளிகள் பலி

296 0

ஆப்கானிஸ்தான், கந்தஹார் பகுதியில் இந்தியாவுக்கு சமையல் எரிவாயு கொண்டுவரும் குழாய் பதிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 

துருக்மேனிஸ்தான் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வருவதற்காக, சுமார் 1800 கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கண்ட நாடுகளின் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
சுமார் 800 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த திட்டப்பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள மாய்வன்ட் மாவட்டத்தில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பாதையை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த பகுதியில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் 5 தொழிலாளர்களை துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர்.
ஒரு தொழிலாளியை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment