ஜார்கண்ட் மாநிலம் லதேகார் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் சாலை ஓரத்திலேயே தலித் பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.ஜார்கண்ட் மாநிலம் லதேகார் மாவட்டத்தில் உள்ள ஹெஸ்லா கிராமத்தை சேர்ந்தவர் மணிதேவி (வயது 25). தலித் சமூகத்தை சேர்ந்தவர்.
இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். 3-வதாக கர்ப்பமாகி இருந்தார். அவர் தனது குடும்பத்தினருக்கு ஆதார் கார்டு பெறுவதற்காக 2 குழந்தைகளுடன் லதேகார் வந்திருந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு அவர் சென்று கேட்டபோது வேறு ஒரு நாளில் வரும்படி கூறினார்கள்.
எனவே ஊருக்கு திரும்புவதற்கு முடிவு செய்தார். லதேகாரில் இருந்து அவரது கிராமத்துக்கு 18 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. திரும்பி செல்வதற்கு போதிய பணம் இல்லை. எனவே அங்கு உள்ள டீக்கடை அருகே இரவு படுத்திருந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தான் அரசு ஆஸ்பத்திரி இருந்தது. அவர் பிரசவ வலியால் துடிப்பதை பார்த்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று நிலவரத்தை கூறினார்கள்.
ஆனால் அங்கிருந்த டாக்டர்களோ, நர்சுகளோ அதை கண்டுகொள்ளவில்லை. ஆம்புலன்சை அனுப்பி அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துவர முயற்சி எடுக்கவில்லை. பிரசவ வலி அதிகமாகி சாலை ஓரத்திலேயே மணிதேவி குழந்தை பெற்றார்.இந்த விஷயம் போலீசுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆம்புலன்சை அனுப்பி மணிதேவியையும், குழந்தையையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட டாக்டர்கள், மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டம் நிர்வாகம் மூலம் விளக்க நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.