கர்நாடகாவில் தமிழ் இளைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மகன் திருமண வரவேற்பு விழா புதுவை ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.
திருமண வரவேற்பு விழாவில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஜி.ராமகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் முகநூலில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவு செய்த தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடந்தது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கனிமொழி எம்.பி. பதில் அளித்து பேசியதாவது:-
கருத்துக்களை பதிவு செய்யக்கூட தமிழனுக்கு உரிமையில்லை என்ற நிலை கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. தமிழனை தாக்கியது மனிதாபிமானமற்ற இழுக்கான செயல்.
இச்செயலை செய்தவர்களை கர்நாடக அரசு கண்டிக்க வேண்டும், நதிநீர் பிரச்சனைகளை திசை திருப்பி மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.