மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது- வைகோ

312 0

201609081007010456_vaiko-says-cauvery-issue-prime-minister-to-give-crisis_secvpfகர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பதற்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்று வைகோ பேசினார்.புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு பக்க பலமாக உள்ளது. வெளிப்படையாக அனுமதி அளிக்காவிட்டாலும் அணை கட்டப்படுவது உறுதியாகி விட்டது. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 15 ஆயிரம் கனஅடி நீர் அளிக்காமல் கண் துடைப்பிற்காக தற்போது அணையை திறந்து விட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது என்ற போர்வையில் கர்நாடக மாநில அரசே மறைமுகமாக முழு அடைப்பை நடத்தியது. இதில் தமிழக முதல்-அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியது கண்டனத்திற்கு உரியது.

கர்நாடகாவில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அரசியல் லாபத்திற்காக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கர்நாடகத்தை போல கேரள மற்றும் ஆந்திர அரசுகளும் தமிழகத்தை வஞ்சிக்கின்றன.

தமிழக முதல்-அமைச்சர் முல்லை பெரியாறு பிரச்சனையிலும், காவிரி பிரச்சனையிலும் முறையாக உச்சநீதிமன்றத்தை அணுகி முறையான நடவடிக்கை எடுத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. காவிரி பிரச்சனையில் தமிழக முதல்-அமைச்சரின் செயல்பாடு திருப்தி தரக்கூடியதாக உள்ளது. ஆனால் இன்றைக்கு உள்ள நிலையில் கர்நாடகா ஒட்டு மொத்தமாக ஓரணியில் உள்ளது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டார்கள். ஆனால் தமிழகம் பிளவுபட்டு உள்ளது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

எனவே தமிழக முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு முடிவு எடுத்து பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது பிரதமர் நியாயமாக நடந்து கொள்வார் என்பதற்காக அல்ல. எதிரும் புதிருமாக உள்ள அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஓரணியில் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காகத்தான்.இவ்வாறு அவர் கூறினார்.