மலேசிய முன்னாள் பிரதமர் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவரது வீட்டில் 100 கிலோ தங்கம், ரூ.171 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவரது கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி கூட்டணி, ஆட்சியை பிடித்தது. எனவே மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார்.
அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோலாலம்பூரில் பெவிலியோன் அடுக்குமாடி குடியிருப்பில் ரசாக்குக்கு சொந்தமான 2 வீடுகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 100 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர ரசாக்கின் வீட்டில் ஒரு பாதுகாப்பு பெட்டகமும் உள்ளது. அதன் சாவி தொலைந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருந்தாலும் அதை திறக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பெட்டகம் திறக்கப்பட்டால் மேலும் தங்கம், பணம் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்கள் சிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்