32 ஆண்டுகள் தீர்க்க முடியாத காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து உள்ளது- முதலமைச்சர் பேச்சு

370 0

ஜெயலலிதாவின் சட்ட போராட்டத்தால் 32 ஆண்டுகள் தீர்க்க முடியாத காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கொடைக்கானலில் இன்று கோடை விழா தொடங்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து பல்லடம் தாராபுரம் வழியாக நேற்று இரவு பழனி வந்தார். பழனி பஸ் நிலையம் ரவுண்டானா அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பழனி நகர அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின்பு இந்த ஆட்சி எத்தனை நாள் தாக்கு பிடிக்கும் என்று சொல்லிகொண்டு இருந்தவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில், 15 மாத காலம் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுகொண்டு இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட அத்தனை திட்டங்களையும் இந்த அரசு நிறைவேற்றிகொண்டு இருக்கிறது.

இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் இந்த ஆட்சியின் செயல்பாட்டை பார்த்து விரல் வைத்து ஆச்சரியப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.தமிழகத்தின் ஜீவ நதியான காவிரிக்கு உச்சநீதிமன்றம் இறுதியான தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை தமிழக மக்கள் பாராட்டுகிறார்கள்.

ஜெயலலிதா காவிரி பிரச்சனைக்கு தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரது சட்ட போராட்டத்தினால் அது நிறைவேறி இருக்கிறது. இந்த வழக்கின் மூலமாக தமிழகத்திற்கு இந்த அரசு வெற்றியை தேடி தந்துள்ளது.

காவிரி நதிநீரை பெறுவதற்காக 4 நாட்கள் மெரினா கடற்கரையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா சட்டப்போராட்டத்தின் வாயிலாக நமக்கு கிடைக்கவேண்டிய உரிமையை பெற போராடினார். அந்த போராட்டத்தின் காரணமாக 32 ஆண்டுகள் தீர்க்க முடியாத காவிரி பிரச்சனையில் தற்போது வெற்றி கிடைத்து உள்ளது.

இந்த அரசு ஏழை எளிய மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. ஏழைகளை பொருளாதார தரத்தில் உயர்த்துவதற்காக இந்த அரசு செயலாற்றி வருகிறது. தமிழகத்தை எத்தனையோ கட்சிகள் ஆண்டு இருக்கலாம் வந்து இருக்கலாம் எத்தனையோ கட்சிகள் தொடங்கப்படலாம்.

ஆனால் எம்.ஜி.ஆர். 11 ஆண்டுகாலம் சிறந்த ஆட்சியை தந்தார். அதேபோல ஜெயலலிதாவும் சிறப்பான ஆட்சியை தந்தார். 15 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்த ஒரே முதல்வர் ஜெயலலிதா தான். அவர் தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காக பாடுபட்டார். அவர் உருவாக்கி தந்த இந்த ஆட்சி ஏழை எளிய மக்களுக்காக அத்தனை நன்மைகளையும் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment