காவிரி தீர்ப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சினையில் நான் கூறியபடி நடந்து விட்டது. மத்திய அரசின் தந்திரத்திற்கும் சூழ்ச்சிக்கும் தமிழக அரசு பலியாகிவிட்டது. தமிழக அரசு காவிரி தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் அவர்களையும் தமிழக மக்களையும் ஏமாற்றியது போல் ஆகிவிடும். தமிழகத்திற்கு நீதி வழங்க வேண்டிய மத்திய அரசும், தலைமை நீதிபதியும் திட்டமிட்டு செயல்பட்டு உள்ளார்கள்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி வி.பி.சிங் அரசு நடுவர் நீதிமன்றத்தை அமைத்தது. அந்த நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நமக்கு முழுமையான நீதி கிடைக்காவிட்டாலும் ஒரு பாதுகாப்பு கிடைத்தது. அந்த பாதுகாப்பும் இப்போது இல்லாமல் போய் விட்டது. இப்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் அந்த பாதுகாப்பு இல்லை.
இப்போது கூறப்பட்டுள்ள தீர்ப்பின்படி கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தன்னதிகாரம் என்ற பகுதியை முழுமையாக எடுத்து விட்டார்கள். இந்த தீர்ப்பின்படி இவற்றை தடுக்க மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசிடம்தான் போக வேண்டும். காவிரி வழக்கில் தமிழக அரசும், வக்கீல்களும் தவறு செய்து விட்டார்கள்.
நான் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும், இப்போதுள்ள தீர்ப்பையும் முழுமையாக படித்து விட்டு ஒப்பிட்டு பார்க்க உள்ளேன். அதன் மூலம் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்ன என்பது தெரியும். தற்போதைய தீர்ப்பின்படி கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும் தண்ணீர் தர மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.