ஒரு வருடத்திற்கு நாம் 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான பொருளாதார சூழலுக்கு மத்தியிலேயே நாம் பயணித்து கொண்டுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கிராமத்தை அபிவிருத்தியை கட்டியெழுப்பினால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். தற்போது கிராம பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கு உலக வங்கியின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுடன் நேற்று முன் தினம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வு நேற்று முன் தினம் பத்தரமுல்லை வோர்டர்ஸ் ஹெஜ் ஹோட்டலில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக வந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிராம அபிவிருத்தியை கட்டியெழுப்பினால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். தற்போது கிராம பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். தற்போது விவசாயதுறையில் இளைஞர்கள் தூரமாகி வருகின்றனர். ஆகையால் விவசாயத்துறையை நவீனமயப்படுத்த வேண்டும்.
விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்கு 102 மில்லியன் டொலரை உலக வங்கி அன்பளிப்பு செய்துள்ளது. அமெரிக்கா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் விவசாயத்துறை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. நவீனமயப்படுத்துவதின் ஊடாக விவசாயத்துறையின் உற்பத்தி அதிகரிப்பதுடன் தரமும் அதிகரிக்கும். எனினும் தென்ஆசியாவில் இந்த நிலைமை இன்னும் ஏற்படவில்லை.
இலங்கையின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் விவசாயத்துறை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மீன்பிடி மற்றும் விவசாயத்துறையினால் கிடைக்கும் வருமானத்தை நாம் அதிகரிக்க வேண்டும். விவசாய உற்பத்தி தரம் அதிகரிக்கும் போது கிராம பொருளாதாரமும் பலம்பெரும். ஆகவே கிராம பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.
கடந்த வருடத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்தது. அதுமாத்திரமின்றி வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு முதலீடும் கடந்த வருடம் அதிகமாக பதிவானது. இந்நிலையில் நாம் கடன் செலுத்தும் நிலைமைக்கு பொருளாதாரத்தை கொண்டு வந்துள்ளோம்.
இதன்படி ஒரு வருடத்திற்கு நாம் 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான பொருளாதார சூழலுக்கு மத்தியிலேயே நாம் பயணித்து கொண்டுள்ளோம். ஆகவே விவசாயத்துறையை நவீனமயப்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்