வெற்று வெற்றியை கொண்டாடுகிறது பா.ஜ.க. – ராகுல் விமர்சனம்

238 0

கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைத்த பா.ஜ.க. வெற்று வெற்றியை கொண்டாடி வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்தால் மெஜாரிட்டி இருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி இன்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாம நிலையிலும் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருப்பது அரசியலமைப்பின் கேலிக்கூத்து என விமர்சனம் செய்துள்ளார். இன்று பா.ஜ.க. வெற்று வெற்றியை கொண்டாடுவதாகவும், ஜனநாயகத்தின் தோல்வியை கண்டு இந்தியா துயரப்படுவதாகவும்  ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment