யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்கள் தமது உறவுகளை கைது செய்து பின்னர் காணாமல் ஆக்க செய்தனர் என்றும் தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம் மனு மீதான விசாரணையானது நேற்றைய தினம் இடம்பெற்ற போது, மனுத்தாரர் தரப்பு சட்டத்தரணிகளான சுபாஜினி மற்றும் திருக்குமரன் ஆகியோர், இவ் மனுத்தாரர்கள் தமது உறவுகளை இராணுவமே கைது செய்து சென்றதாகவும், தற்போதும் தமது உறவுகள் இராணுவ முகாம்களில் இருப்பதாகவும், அதனை சிலர் கண்டதாகவும் கூறிவருவதுடன் அதனை உறுதியாக நம்பியுள்ளார்கள் வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்து பிரதி சொலிஸ்ட.ர் ஜென்றல் சேத்திரி, குறித்த மனுத்தாரர்கள் கூறுவது போன்று எந்தவொரு இராணுவ முகாம்களிலும் காணமல் போனவர்கள் இல்லை. அவ்வாறிருந்தால் நானே முதலில் அவர்களை நீதிமன்றில் முன்னிறுத்தி அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பேன். நாங்கள் தமிழர்களுக்கும், எவருக்கும் எதிரானவர்கள் அல்ல. எனவே அவ்வாறான எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இராணுவ சட்டத்தரனி, ஜக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் கூட வந்து இராணுவ முகாம்களை சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் கூட இராணுவ முகாம்களில் எவரும் இருப்பதாக கண்டறியவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்