சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – மகேஸ் சேனநாயக்க

32932 0

சர்வதேச சமூகம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் வருமாறு

சர்வதேச சமூகம் சொல்வதை மாத்திரம் கேட்டால் இலங்கை மாத்திரமல்ல வேறு எந்த நாடும் முன்னேற முடியாது.

சர்வதேச சமூகம் தெரிவித்ததை செவிமடுத்திருந்தால் நாங்கள் யுத்தத்தில் வென்றிருக்க மாட்டோம், இன்று நாங்கள் அனுபவிக்கின்ற இந்த அமைதி சமாதானம் கிடைத்திருக்காது.

ஆகவே அந்த நேரத்தில் அரசியல் சக்திகள் மற்றும் மக்களின் ஆதரவுடன் அனைவரும் ஒன்றிணைந்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தோம்.

தற்போது நாங்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளோம்.  இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.உயிரிழப்பே இல்லாத யுத்தங்கள் என்று எதுவும் இல்லை.

தற்போது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டால் அவர்களிற்கு நாங்கள் எந்த அனுதாபத்தையும் காண்பிக்கமாட்டோம்.

நாங்கள் ஒழுக்கத்தை பேணவிரும்புகின்றோம் இதன் காரணமாக நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்ள தயார். ஆனால் இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம்.

இலங்கை இன்று அமைதியான நாடு, நாங்கள் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பு எதனையும் எதிர்பார்க்கவில்லை ஆனால் உள்நாட்டில் சில மோதல்கள் இடம்பெறக்கூடும். பல்வேறு நோக்கங்களுடனான மக்கள் வாழ்வதால் சிறிய மோதல்கள் இடம்பெறலாம்.

ஆனால் 2019 மே 19 முதல் விடுதலைப்புலிகள் தொடர்பாகவோ அல்லது பயங்கரவாதம் தொடர்பிலோ எந்த சம்பவமும் இடம்பெறவில்லை. யுத்தத்திற்கு பிந்திய சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உலகிற்கான முன்மாதிரியாக நாங்கள் விளங்குகின்றோம்  என்பதே இதன் அர்த்தம்.

ஆனால் யுத்தத்திற்கு தயாராகயிருப்பது ஒரு தேசத்தின் கடமை, இது உள்நாட்டு யுத்தமாகயிருக்கவேண்டும் என்பதல்ல  பிராந்திய மோதலாகவும் இருக்கலாம்.

இந்தியாவின் நெருங்கிய நண்பர்கள் நாங்கள், இந்தியாவில் பெருமளவு இலங்கையர்கள் உள்ளனர் அதேபோன்று பெருமளவு இந்தியர்கள் இலங்கையில் வாழ்கின்றனர். இது பாதுகாப்பு கரிசனைக்குரியவிடயம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை.

இலங்கையில் முஸ்லிம் சகோதர சகோதரிகள் வாழ்கின்றனர் இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமாக அவர்கள் உள்ளனர். இலங்கையில் ஐ. எஸ். அமைப்பு இல்லை, ஆனால் தங்களை தாங்களே உணர்வூட்டிக்கொண்ட சிலர் உள்ளனர்.

அவர்கள் இணையத்தினால் உணர்வூட்டப்படுகின்றனர், அவர்கள் இங்கு செயற்படுகின்றனர் இது அனைத்து நாடுகளிற்கும் பொதுவான விடயம், இதன் காரணமாக இவற்றை எதிர்கொள்ளக்கூடிய இராணுவத்தை உருவாக்குவது எங்கள் கடமை.

இலங்கையில் 12000 சீனப் பிரஜைகள் வாழ்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அப்பாவிகள் ஆனால் யாராவது அவர்களை பயன்படுத்தலாம்.

இது தவிர புனர்வாழ்வு பெற்ற 13000 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் உள்ளனர். புனர்வாழ்வு பெற்று வெளிநாட்டில்  வாழும் சிலர் உள்ளனர் அவர்கள் தாங்கள் உயிர் பிழைப்பதற்காக பிரச்சினைகளை உருவாக்கலாம்.

Leave a comment