மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தில் இன்று காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோதே மேலும் பல மனித எலும்புத்துண்டுகளுடன், சில மனித எச்சங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடைக்கப்பட்ட குறித்த கட்டடப் பகுதியில் அதிகளவான நீர் காணப்பட்டமையினால் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நீதவான் முன்னிலையில் அகழ்வுகள் இடம்பெற்றன.
எனினும் தற்போது குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அகழ்வுப்பணிகள் மீண்டும் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதன் போது மன்னார், எமில்நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று கொட்டப்பட்ட மண்ணை பார்வையிட்டதோடு, மன்னார் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை கட்டிட நிர்மானப்பணிகள் இடை நிறுத்தப்பட்டன.இந்நிலையிலேயே இன்று மீண்டும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.