அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (17) வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சு.க உறுப்பினர்கள் குழு, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள மற்றுமொருத் தரப்பு அரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் நாளை மறுதினம் இரவு 7 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில், நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதுத் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட சு.க குழு செயற்குழுக்கூட்டத்தின்போது வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அந்த கோரிக்கை உள்ளிட்ட, 15 முக்கிய யோசனைகள் அடங்கிய கடிதமொன்றை இன்றைய தினம் (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.