அமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த 4ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ் மேர்சி கப்பலின் தளத்தில் நடத்தப்பட்டது.
இது ஒரு இணைந்த குழு பல்நாட்டு வைத்திய நிபுணர்களாலும் வைத்திய வல்லுனர்களாலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பித்தப்பை அகற்றப்பட்டது.
இலங்கையர் ஒருவருக்கு டாவின்சி ஓஐ ரோபோ சத்திர சிகிச்சை முறையில் (Da Vinci XI Robot Surgical System) இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளபட்டது.
“திருப்புமுனையான இந்த சத்திர சிகிச்சையானது கூட்டுறவு, திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியப்பாட்டு எல்லைகளுக்கும் அப்பால் சென்றுள்ளது” என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார்.
“சர்வதேச வைத்திய துறைக்கு முன்னோடியான இந்த சாதனையில் இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் கூட்டுசேர்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கப்பலொன்றின் தளத்தில் வைத்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டது இதுவே எனக்கு முதல் அனுபவமாகும்” என மூதூர் ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர். வைரமுத்து வரணிதரன் தெரிவித்தார்.
கடுமையான திட்டமிடல் ஆயத்தப்படுத்தலில் ஒரு முடிவாகவே இந்த சத்திர சிகிச்சையானது சுமுகமானதாகவும் வழமையானதொன்றாகவும் அமைந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
“பசுபிக் பங்காண்மை” எனப்படுவது, பசுபிக் பிராந்தியத்தில் வருடாந்தம் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு அனர்த்த பதிலளிப்பு தயார்படுத்தல் நடவடிக்கையாகும். இந்த வருடத்தின் நடவடிக்கையில் இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பெரு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ மற்றும் சிவில் உறுப்பினர்கள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது