புற்று நோய்காக வழங்கப்படும் மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 15 இலட்சம் ரூபா வரை செலவு வரையறுக்கப்பட்டிருந்தது. இந்த வரையறை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. புற்று நோயாளர்கள் இறப்பது நோயினால் அல்ல நோய்க்கான சிகிச்சைக்கு செலவிடுவதற்கு பணம் இல்லாமையே ஆகும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த காலத்தில் நோயாளர் ஒருவருக்கு மருந்து ஊசி ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும் இதற்கான சட்ட திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. நோயாளருக்கு நிதி வரையறை இன்றி சிகிச்சை வழங்கப்படுகிறது என அபெக்ஸா வைத்தியசாலையின் பணிப்பாளர் வில்பிரட் குமாரசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து ஊசிக்காக வருடாந்தம் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இருப்பினும் கடந்த வருடத்தில் இதற்காக இரண்டாயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அபெக்ஸா வைத்தியசாலையில் உள்ள சுவ மங்சல நிதியத்திற்கு பொறுப்பான சங்கைக்குரிய வெங்கலே சீவலி தேரர் கருத்து தெரிவிக்கையில், 1982ம் ஆண்டு முதல் தமது நிதியத்தின் மூலம் 22 இலட்சம் நோயாளர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது