அரசாங்கத்தின் வீண் செலவுகளை ஈடுசெய்யவே எரிபொருள் விலையை அதிகரித்தது- JVP

293 0

எரிபொருட்களுக்கு விதிக்கும் வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து, அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தமை அநீதியானது என ஜே.வி.பி.  பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் அரசியலமைப்பையும் மீறி கூடுதலான அமைச்சர்களைக் கொண்டுள்ளது. இதற்கான செலவுகளைக் குறைக்காமல் மக்கள் மீது வரிகளைச் சுமத்தியும் வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு அரசாங்கம் 45 ரூபா வரியை அறவிடுகிறது. டீசல் லீற்றர் ஒன்றுக்கு 24 வீதம் வரி அறவிடப்படுகிறது. இவ்வாறு அறவிடப்படும் வரிகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.

அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருப்பதால் சகலவற்றுக்குமான விலை அதிகரிக்கப்படவுள்ளது. முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதியின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது, உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்ந்துள்ளது என்ற காரணங்களைக் காண்பித்தே எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

எனினும், எரிபொருட்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அதிக வரி குறித்து எதுவும் கூறுவதில்லை. பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 45 ரூபா வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை 35 ரூபாவாகக் குறைப்பதால் திறைசேரி ஒன்றும் நஷ்டம் அடைந்துவிடப்போவதில்லை. மக்கள் ஏற்கனவே பல்வேறு வரிச் சுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எரிபொருட்களுக்கு விதிக்கும் வரிகளைக் குறைத்து தற்காலிகமாக மக்களுக்கு நிவாரணமொன்றை வழங்குவதற்கு அரசாங்கத்தால் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லையெனவும்  அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment