பெருநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நகர புனர்வாழ்வு பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘வீட்டுக்குப் பதிலாக வாழ்க்கை’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகளையுடைய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் 430 வீடுகளை கையளிக்கும்
நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் தெமட்டகொட ‘சியபத் செவன’ புதிய வீட்டுத்தொகுதியில் இடம்பெற்றது.
கொழும்பு நகர் எங்கிலும் உள்ள தோட்ட வீடுகளில் உள்ள குறைந்த வசதிகளையுடைய சுமார் 50,000 குடும்பங்களை நவீன வசதிகளுடன் கூடிய மாடி வீடுகளில் குடியமர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்திற்கு 1,748 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2016, 2017ஆம் ஆண்டுகளில் 7,496 மில்லியன் ரூபா முதலீட்டில் 1,874 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டதுடன் 2018ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைகின்றபோது 5,756 மில்லியன் ரூபா முதலீட்டில் மேலும் 1,439 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
2020க்கு முன்னர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கும் நோக்கில்42,330 மில்லியன் ரூபா முதலீட்டில் 9,100 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹேணமுல்ல, தெமட்டகொட, அங்கொட, மட்டக்குளிய, மாளிகாவத்தை, கொலன்னாவ, புளுமென்டல் ஆகிய பகுதிகளில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
புதிய வீடு மட்டுமன்றி புதிய வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான பங்களிப்பும் இந்த வீட்டுத்தொகுதியுடன் அம்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பிள்ளைகளின் கல்வி, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் தலைமைத்துவ
திறன்விருத்தியை மேற்கொண்டு தேசிய மட்டத்திற்கு கொண்டு வருவதற்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவும் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
நினைவுப்பலகையை திறந்து வைத்து புதிய வீட்டுத் தொகுதியை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி அவ்வீட்டுத்தொகுதியை பார்வையிட்டதுடன் வீட்டுத் தொகுதியில் உள்ள சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார். புதிய வீடுகளை மக்களிடம் கையளிக்கும் வகையில் 10 வீடுகளுக்கான திறப்புகளை
வீட்டு உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரகுமான், மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த சிறி வர்ணசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொரளை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி அஜித் பத்திரண, நகர அபிவிருத்தி அதிகார சபையின்
பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்