சர்வதேச தாதியர் தின விழா

271 0

அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச தாதியர் தின விழா 2018 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (10) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தாதியர் சேவைக்கு பெரும் பங்காற்றிய புலொரன்ஸ் நைட்டிங் கேர்லின் பிறந்த தினத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன், இலங்கையிலும் தாதியர்களினால் அத்தினம் மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

”சுகாதார சேவை மனித உரிமையாகும்” என்ற கருப்பொருளின் கீழ் 2500க்கும் மேற்பட்ட தாதியர்களின் பங்குபற்றுதலுடன் இவ்வருட தாதியர் தின நிகழ்வு இடம்பெற்றது. நைட்டிங் கேர்லின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட நினைவுச் சஞ்சிகை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விசேட அதிதி உரையை பேராசிரியர் நிஹால் டி சில்வா நிகழ்த்தினார். அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு பொது வைத்தியசாலையின் தேசிய பயிற்றுவித்தல் அதிகாரி புஷ்பா ரம்யாணி சொய்சா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment