மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய நிர்வாக கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
804 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் அமைக்கப்படவுள்ள மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வலிகாட்டலின் கீழ், உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அமைச்சர்களின் பங்குபற்றலுடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தனவினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா, சுகாதார பிரதி அமைச்சர் பயிசல் காசிம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய மாவட்ட நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கலை நாட்டி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் அரச திணைக்கள அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரதேச செயலாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.