தமிழில் முறைப்பாடு செய்ய புதிய இலக்கம் அறிமுகம்!

336 0

160910121554_srilanka_telephone_number_for_report_crimes_in_tamil_640x360_bbc_nocreditகுற்றச் செயல்கள் தொடர்பாக சிறீலங்கா காவல்துறையினரிடம் உடனடியாக தமிழில் முறைப்பாடு செய்வதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தினை காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கடந்த வெள்ளிக்கிழமை இரவு துவக்கி வைத்துள்ளார்.

குற்றச் செயல்கள் தொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிப்பதற்கு 119 என்ற தொலைத்தொடர்பு இலக்கம் உள்ளபோதிலும், அதனூடாக தமிழில் தொடர்புகொள்ளமுடியாத காரணத்தினால் தமிழ் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக காவல்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே இந்த புதிய தொலைத்தொடர்பு சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சேவை முதன்முதலாக வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்கள் போதைப் பொருள் வியாபாரம், ஊழல் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டுபிடிக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் இந்த தொலைத்தொடர்பு சேவை பெரிதும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் பூஜித ஜெயசுந்தர.

அத்துடன் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் விரிவடைந்துள்ள உறவைப் பலப்படுத்தவும், அமைதி, நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என்பவற்றை உருவாக்கி இரு தரப்பினரும் நெருக்கமாகப் பழக இந்த இலக்கம் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.