ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இதன் பிறகு பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும், 2020 இல் ஜனாதிபதி வேட்பாளர் ஐ.தே.க.யின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கதான் எனவும் சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்றைய ஞாயிறு வாராந்த சகோதர பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும், கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம். இந்த தவறை அடுத்த தேர்தலில் செய்ய மாட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியுள்ள தலைவர் ரணில் விக்ரமசிங்கதான். இருப்பினும், வேறு யாராவது சவால்களை முறியடித்து ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என தன்நம்பிக்கையுடன் முன்வருவார்களாயின் அது குறித்து கருத்தில் கொள்வோம் எனவும் வழங்கியுள்ள நீண்ட செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.