கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தமக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும், அதில் கலந்துகொள்வதற்கான தயார் நிலையிலும் தாம் இல்லையெனவும் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பிலும் இதுவரை இறுதித் தீர்மானங்கள் இல்லையென குறிப்பிட்டுள்ள அவர், தீர்மானம் எடுப்பதற்கு இன்னும் ஒருநாள் அவகாசம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம நேற்று (05) தெரிவித்திருந்த கருத்துக் குறித்து அனுர பிரியதர்ஷன யாபா எம்.பி.யிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக திலும் அமுனுகம நேற்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.