நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயிலை இயக்கி பாதுகாப்பு கமிஷனர் அடுத்தவாரம் ஆய்வு செய்கிறார்.
நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயிலை இயக்கி பாதுகாப்பு கமிஷனர் அடுத்தவாரம் ஆய்வு செய்கிறார். அவர் தரும் சான்றிதழ்களின் அடிப்படையில் இந்த மாத இறுதியில் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வண்ணாரப்பேட்டை-விமானநிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்டிரல்- பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தொலைவிலும் என மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது.
இதில் தற்போது நேரு பூங்கா முதல் ஆலந்தூர் வழியாக விமான நிலையம் வரையிலும், விமான நிலையம்-சின்னமலை இடையேயும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் மீதமுள்ள பணிகளை துரிதமாக செய்து முடிப்பதற்கு ஏதுவாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நேரு பூங்கா- சென்டிரல் இடையேயும், சின்னமலை-டி.எம்.எஸ். இடையேயும் ரெயில் பாதைகள், ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.
சமீபத்தில் கூட மேற்சொன்ன ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரெயில் பாதைகளில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் செய்து பார்த்தனர்.
பாதுகாப்பு கமிஷனரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த சூழ்நிலையில், தற்போது அடுத்த வாரத்தில் அவர் சென்னைக்கு வருகை தந்து, நேரு பூங்கா-சென்டிரல் இடையேயும், சின்னமலை-டி.எம்.எஸ். இடையேயும், செனாய்நகர்-நேருபூங்கா இடையேயான 2-ம் பாதையிலும் ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, செனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. இதில் கோயம்பேடு-செனாய்நகர் வரை இரண்டு பாதைகளிலும் செனாய்நகர்-நேரு பூங்கா இடையே ஒருவழி பாதையிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் செனாய்நகர்-நேருபூங்கா இடையே இரண்டு பாதைகளிலும் ரெயில்கள் சென்று வரும் வகையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், நேருபூங்கா-சென்டிரல் இடையேயும், சின்னமலை-டி.எம்.எஸ். இடையேயும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த பகுதிகளில் பெங்களூருவில் இருந்து வரும் பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகர், அடுத்த வாரத்தில் சோதனை நடத்துகிறார். முதலில் டிராலி வண்டியில் சென்று ரெயில் பாதையை சோதனை செய்த பிறகு, அதில் திருப்தி அடைந்ததும் மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்வார்.
மேலும், ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் பயணிகளுக்கு செய்யப்பட்டு இருக்கிற பாதுகாப்பில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்கிறார். இவையெல்லாம் திருப்திகரமாக இருக்கிறது என்று அவர் சான்றிதழ் அளித்தால் அந்த பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
பாதுகாப்பு கமிஷனர் அவ்வாறு சான்றிதழ் அளிக்கும் பட்சத்தில், இந்த மாத இறுதியிலேயே நேரு பூங்கா-சென்டிரல், சின்னமலை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.