போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் நடந்த குண்டு மழையில் 100 பேர் பலியாகினர்.போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் நடந்த குண்டு மழையில் 100 பேர் பலியாகினர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. சுமார் 2½ லட்சம்பேர் பலியாகினர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
உள்நாட்டு போர் நடைபெறும் வேளையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அங்கு தாக்குதல் நடத்தி பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக சிரியா அரசு படையுடன் இணைந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து களம் இறங்கி உள்ளது.
இந்த நிலையில் சிரியாவில் 10 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் செய்ய அமெரிக்காவும், ரஷியாவும் தீர்மானித்தன. அதற்கான பேச்சுவார்த்தை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான்கெர்ரி, ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜிலாவ்ரான் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இறுதியில் நாளை (12-ந் தேதி) பக்ரீத் பண்டிகையில் இருந்து 10 நாட்கள் போர் நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிரியா ராணுவம் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் நகரில் அதிக அளவில் மக்கள் கூடும் மார்க்கெட் பகுதியில் குண்டு வீசியது. அதில் 60 பேர் பலியாகினர். 90 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் சிரியாவின் 2-வது பெரிய நகரமான அலெப்போ அருகேயுள்ள அன்தான் மற்றும் ரெய்யான் பகுதியில் நடத்திய குண்டு வீச்சில் 40 பேர் பலியாகினர். இங்கு 110-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.