கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியை தாண்டியது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து கடந்த 6-ந்தேதி முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் 10 நாட்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேற்று முன்தினம் (9-ந்தேதி) அதிகாலை மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது.
நேற்று முன்தினம் காலையில் விநாடிக்கு 7 ஆயிரத்து 905 கன அடியாக இருந்த அணையின் நீர்வரத்து நேற்று காலையில் விநாடிக்கு 15 ஆயிரத்து 070 கன அடியாக அதிகரித்தது. இன்று 1000 கன அடி வீதம் தண்ணீர் அதிகரித்து விநாடிக்கு 16 ஆயிரத்து 53 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று முன்தினம் 76.74 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 77.97 அடியாக உயர்ந்தது. இன்று கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 79.26 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.29 அடி உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறுவதாலும் சம்பா சாகுபடிக்கு விரைவில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கிணற்றுப் பாசன நீர் மூலம் விவசாயிகள் நாற்றங்கால் விட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் நடவுப்பணிகள் தொடங்க உள்ளன. இதனால் தொடர்ந்து 3 மாதங்களுக்கு தண்ணீர் திறந்தால் மட்டுமே சம்பா சாகுபடி முழுமையடையும் என்று விவசாயிகள் கூறினர்.