ஊடக சுதந்திரமென்பது உண்மையினை சொல்வதற்கே.அது ஊடகங்கள் பொய்சொல்வதற்கல்லவென தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட கோரக்கொலை மற்றும் தாக்குதலின் நினைவேந்தல் இன்று யாழ்.பொதுநூலகத்தில் நடைபெற்றிருந்தது.
அங்கு கலந்து கொண்டு தமிழ் ஊடகங்களின் செல்நெறியும் அவை பயணிக்க வேண்டிய திசையும் எனும் தலைப்பில் சிறப்புரையினை ஆற்றியிருந்தார்.
தமிழ் ஊடகங்கள் தமது பாதையினை 180 பாகையினால் இனி திருப்பிக்கொண்டு இனிப் பயணிக்கவேண்டும். அதனால் தான் சொல்கின்றேன் ஊடக சுதந்திரமென சொல்லிக்கொண்டு பொய்களை இனியும் தமிழ் ஊடகங்கள் சொல்லவேண்டாம். அதிலும் தெரிந்துகொண்டு பொய் சொல்வது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அரசியல்வாதிகளின் வார்த்தைகளில் உண்மையை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது. உண்மையுடன் தங்கள் விமர்சனங்களையும் இணைத்தே கூறுகின்றார்கள். அதில் உண்மையை தேடுகிறோமென அந்நாளிதழின் ஆசிரியிர் தே. பிரேமானந்த் தனது பதிலுரையில் தெரிவித்தார்.
இதனிடையே தனது பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் தாக்குதலாளிகளை தெரியும். அவர்களுக்கு எதிரான சாட்சியங்களும் உண்டு என ஈ.சரவணபவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஈபிடிபி பிரமுகரான பொன்னையன் என்பவர் எவ்வாறு குறித்த நாளிதழ் அலுவலகம் மீது ஈபிடிபி தாக்குதல் நடத்தியிருந்தது என குறிப்பிட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.