கடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீத அதிகரிப்பு என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன வர்த்தகத் தூதுக்குழுவுடனான கலந்துரையாடலில் அவர் இது தொடர்பிலான புள்ளிவிபரங்களை அறிவித்தார்.
அடுத்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை சீனாவின் யுனான் மாநிலத்தில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு சீனத் தூதுக்குழு அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்தது. இதனுடன் இணைந்ததாக கும்மிங் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக மாநாடும் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சீன சந்தையில் ஸ்திரமான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
யுனான் மாநிலத்தில் கூட்டு வர்த்தக முயற்சிகளில் முதலீடு செய்வதன் மூலம் புதிய வர்த்தகங்களை ஆரம்பிக்க இலங்கை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என சீனத் தூதுக்குழுவின் அங்கத்தவர் ஷூஷூன் காவோ தெரிவித்தார்.
தமது மாநில அரசாங்கம் விவசாயம், ஒளடத உற்பத்தி, சுற்றுலாத்துறை, தாவர இனப்பெருக்கம் முதலான துறைகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.