புதிய அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லை. இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நாட்டிலுள்ள பிரச்சினை ஏதுவும் தீரப்போவதுமில்லை. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கே இவ்வாறன விடயங்களை அரசாங்கம் மேற்கொள்கிறது. ஆகவே உடனடியாக பாராளுமன்றத்தைத் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றம் கூடும்போது எதிர்கட்சி வரிசையில் அமர்வதற்கு இட ஒதுக்கீடு செய்து தருமாறு சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இருபத்து மூன்று பேர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்க தற்போதும் பிரதமராக பதவி வகிக்கின்றார். ஆகவே பிரதமர்மீது நம்பிக்கையில்லாதவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கு தார்மீகம் இல்லை. இதேவேளை எதிர்வரும் ஏழாம் திகதி மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் தினக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
மேலும் எட்டாம் திகதி பாராளுமன்றம் கூடும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்கவுரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் என்ன? தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதா? இல்லையா? இவ்வாறான பேதளிப்பான நிலையில் அமைச்சுகள் சிலவற்றை மாற்றுவதன் மூலம் மாத்திரம் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை.
திருடர்களை துரத்தி சுத்தமான அமைச்சரவையை உருவாக்குவதற்கே அமைச்சரவை மாற்றம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டு வந்தார். எனினும் அவ்வாறு எதுவும் நடைபெறப்போதவில்லை. ஏனெனில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் முக்கியமானவர். அவரின் அனுமதியின்றி எதனையும் செய்துவிட முடியாது. மேலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன உள்ளபோதும் நிறைவேற்று அதிகாரத்தை காணமுடியாதுள்ளது.
அத்துடன் பாராளுமன்றத்தை சட்டவிரோதமான முறையில் தற்காலிகமாக மூடியுள்ளனர். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். எனினும் முயற்சி எடுப்பதாக எமக்குத் தெரியவில்லை. சர்வதேச பொலிஸும் சிவப்பு பிடியாணை பிறப்பித்துள்ளது. காணும் இடத்தில் கைது செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. எனினும் அவரை அவ்வாறு கைதுசெய்ய முடியாது. ஏனெனில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரைப் பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய சகல விடயங்களையும் மேற்கொள்கிறார்.
பாராளுமன்றத்தை தற்காலிகமாக மூடியதன் மூலம் கோப் குழு முழுமையாக கலைந்துள்ளது. பாரளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியின் தலைமையிலான கோப் குழுவிற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. எனினும் பாரளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டதன் மூலம் தற்போது கோப் குழு இல்லை.
ஆகவே அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதற்கே நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு முன்னரும் டி.யூ.குணசேகர தலைமையிலான கோப் குழு தனது அறிக்கையினை சமர்ப்பிப்பற்கு ஆயத்தமான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதனால்தான் மத்திய வங்கியில் இரண்டாம் முறையும் மோசடி இடம்பெற்றது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கே அரசாங்கம் இவ்வாறானவற்றை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
மேலும் அண்மையில் அரசாங்கம் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது. அவ்வாறு அதிகரிக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை. ஏனெனில் கடந்த மூன்று மாதங்களில் உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை. மாறாக விலை குறைவடைந்துள்ளது. எனினும் இலங்கையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நடவடிக்கையினால் எப்போதுமில்லாதவாறு இலங்கை ரூபாயின் பெறுமானம் குறைவடைந்துள்ளது. அதனாலேயே சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.