மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையினை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமையானது மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படும் நிலைமையை உருவாக்கி உள்ளது என்றும் பெப்ரல் மற்றும் கபே அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை இதுவரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவ் அமைப்புக்கள் குறிப்பிட்டன.
இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிடுகையில்,
மூன்று மாகாண சபைகளுக்கான கால எல்லை நிறைவடைந்துள்ள நிலையில் அவற்றுக்கான எல்லை நிர்ணய அறிக்கைகள் இது வரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடவில்லை. குறித்த ஒருமாத காலப்பகுதிக்குள் எல்லை நிர்ணய அறிக்கை வெளியிடப்பட்டால் மாத்திரமே குறிப்பிட்ட காலத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும். ஆனால், எல்லைநிர்ணய அறிக்கை இது வரையில் வெளியிடப்படாத நிலையில் மாகாணசபை தேர்தலை செப்டெம்பர் மாதத்தில் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஒரு மாத காலப்பகுதிக்குள் எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பிரதமரால் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கென தனியான குழுவொன்று நியமிக்க முடியும். அந்த குழுவினூடாக எல்லை நிர்ணய நடவடிக்கைகளை விரைவுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியும். அவ்வாறானவொரு குழுவும் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.
மாகாண சபைதேர்தல் முறைமைதொடர்பில் பலவாறான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது எல்லை நிர்ணய அறிக்கையும் தேர்தலை ஒத்திவைக்க கூடிய சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.
மேலும் சிவில் அமைப்பு என்ற ரீதியில் எல்லை நிரண்ய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கென பெப்ரல் அமைப்பு குழுவொன்றினை நியமித்துள்ளது. எவ்வாறாயினும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையிலாவது மாகாண சபைகளுக்கான தேர்தலினை விரைவில் நடத்தவேண்டும் என்றார்.
இது குறித்து கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிடுகையில்,
மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்காகவே எல்லை நிர்ணய அறிக்கையினை வெளியிடும் பணிகளும் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. எல்லை நிர்ணய அறிக்கை ளிவெயிடப்படாமல் தேர்தலை நடத்த முடியாது.
குறித்த காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேணடுமானால் எல்லை நிர்ணய அறிக்கையும் விரைவில் வெளியிடப்படவேண்டும் என்றார்.