வவுனியா, மன்னாரில் குற்றங்களை தமிழில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் (காணொளி)

515 0

00

வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்களை குறைக்கும் முயற்சியாக, குற்றங்கள் தொடர்பாக தாய்மொழியில் முறைப்பாடு செய்வதற்கு வவுனியா மற்றும் மன்னார் மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வவுனியா பிரதிப்பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வில் உரைநிகழ்த்திய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர,
‘மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை தங்கள் தாய்மொழியிலேயே தெரிவிக்கமுடியும்.
வடபகுதியில் குற்றச்செயல்களை குறைக்கும் முயற்சியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் நேற்று இரவு, பொது மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வு, வன்னிக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர கலந்துகொண்டு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பொலிஸ் மற்றும் பொதுமக்கள் தொடர்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
அறிமுகப்படத்தப்பட்ட புதிய இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு, பொலிஸ் மா அதிபர் முன்னிலையில் வவுனியாவிற்கு 0766224949 இலக்கமும், மன்னாருக்கு 0766226363 இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டது.
நிகழ்வைத் தொடர்ந்து சர்வமத போதகர்களின் ஆசிச் செய்தி இடம்பெற்றதுடன் நிருத்திய நிகேதன நுண்கலை கல்லூரி மாணவிகளால் வரவேற்பு நடனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இசை நிகழ்வும் நடைபெற்றதுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர பாடல் ஒன்றையும் பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் தொடர்ச்சியாக சிவில் சமூக அமைப்பினருக்கு கிராமங்களில் நடைபெறும் குற்றங்களை பொலிசாருக்கு உடனடியாக அறிவிக்கும் முகமாக கட்டணங்கள் இல்லாத தொலைபேசி இலக்கங்கங்கள் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டது.
19 வருடங்களாக பொலிஸ் துறையில் சேவையாற்றிய பெண் ஒருவர் தற்போது நடக்கமுடியாத நிலையிலிருப்பதால் அவருக்கு சக்கர நாற்காலி ஒன்றும் பொலிஸ் மா அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது.