வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் பணிபுரிந்த வைத்தியர்களால் ‘வடக்கு மாகாண மருத்துவர் மன்றம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணம் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர் ப.அச்சுதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சனிக்கிழமை நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திற்குத் தனியான மருத்துவ மன்றம் ஒன்றின் அவசியம் குறித்து வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் வைத்தியர்களால் நன்கு உணரப்பட்டும், அது அமைக்கப்படுவது என்பது வெறும் கனவாகவே இருந்தது. தற்போதுதான் அது செயல்வடிவம் பெற்றுள்ளது.
இலங்கை மருத்துவர்களுக்கென பல்வேறு தொழிற்சங்கங்கள், கல்விசார் அமைப்புக்கள் எனப் பல இயங்கிவருகின்றபோதிலும், வடக்கு மாகாண மருத்துவ மற்றும் சுகாதார விடயங்கள் தொடர்பாக அந்த அமைப்புக்களால் புரிந்துகொள்ளமுடிவதில்லை.
இங்கு வாழும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சுகாராத சேவை அமைப்புக்களின் நிலை போன்ற விடயங்கள், போன்றவற்றை குறித்த அமைப்புக்களால் முழுமையாக உணரமுடிவதில்லை.
இதன் யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட வைத்தியர்கள் எமக்கென பிரத்தியேகமான அமைப்பொன்றை உருவாக்கத் தீர்மானித்தோம். இந்த அமைப்பில் இணைந்துகொள்ள வடக்கு மாகாண வைத்தியர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வடமாகாணத்தில் வைத்தியர்களை ஒன்றிணைத்து, அவர்களின் சிறப்புரிமைகள் மற்றும் நன்மைகளைப் பேணும் நோக்குடனும், வடக்கின் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி, தமிழ் மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாளாந்த பணிகளுக்குமப்பால் சேவைகளை வழங்கல் போன்ற இலக்குகளைக் கொண்டு இந்த மன்றம் உருவாக்கப்படுகின்றது.
இதேவேளை, இம்மன்றம் ஒரு தொழிற்சங்கமில்லை. ஒரு நலன்புரி அமைப்பு மட்டுமே. அதனால், மக்களிற்கு சிரமங்களைத்தரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் மட்டுமல்லாது அடையாள வடிவிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளது’ என்றுள்ளார்.